அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 51 இஞ்ச் அளவுள்ள இந்த சிலை செதுக்கப்பட்ட கருப்பு கிரானைட் பாறை, கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் உள்ள ஜெயபுரா ஹாப்ளி கிராமத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்குதான் உயர்தர கருப்பு கிரானைட் சுரங்கங்கள் உள்ளன.
இது குறித்து பெங்களூரில் உள்ள ராக் மெக்கானிக்ஸ் தேசிய மையத்தின் இயக்குனர் டாக்டர். வெங்கடேஷ் கூறியதாவது: பால ராமர் சிலை செதுக்கப்பட்ட, கருப்பு கிரானைட் 250 கோடி ஆண்டுகள் பழமையானது. மிகவும் உறுதியானது. எந்தவித காலநிலைகளை தாங்கக் கூடியது.
இதற்கு பராமரிப்பு அதிகம் தேவையில்லை. இந்த வகை பாறையில் எந்தவித சிலையையும் செதுக்க முடியும். அதிக அடர்வு உள்ள இந்த பாறையில் துளைகள் மிகவும் குறைவாக இருக்கும். இந்த பாறைக்குள் எந்தவித உள் விரிசல்களும் இருக்காது. நீரை உறிஞ்சாத இந்தப் பாறை கார்பனுடன் வினைபுரிவதில்லை. இவ்வாறு வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அணைகள் மற்றும் அணு மின் நிலையங்கள் கட்டுவதற்கான கற்களை பெங்களூரில் ராக் மெக்கானிக்ஸ் தேசிய மையம்தான், பரிசோதிக்கின்றன. ஐசோடோபிக் ஆய்வுகள் மூலம் ஒரு பாறை எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதை கண்டறிய முடியும். கிரானைட் பாறைகளில் பெரும்பாலானவை, பூமி தோன்றிய பிறகு, எரிமலை குழம்புகள் குளிர்ந்து உருவானவையாகும்.
மிகவும் கடினமான பாறை வகையைச் சேர்ந்த கருப்பு கிரானைட்டை 6 மாத காலமாக செதுக்கி பால ராமர் சிலையை மைசூரைச் சேர்ந்த 38 வயது சிற்பி அருண் யோகிராஜ் உருவாக்கியுள்ளார். இவர்தான் இந்தியா கேட் பகுதியில் வைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை செதுக்கியவர்.