21 நாட்கள் தனிமையா – இது கடவுள் நமக்களித்த ஒரு வரம்

 

வரும் 21 நாட்களும் நீங்கள் அடைந்து கிடக்கும் இடம் அது உங்கள் வீடோ, ஹாஸ்டலோ, அலுவலகமோ அல்லது வேறு எங்கிருந்தாலும் சரி (இந்த நேரத்தில் வீட்டில் குடும்பத்துடன் இருக்கும் வசதி கிடைத்தவர்கள் உண்மையில் பாக்கியவான்கள்).

இந்த நாட்களை உங்கள் நல்ல குணங்களை வளர்க்க, படிக்க, திறமைகளை வளர்க்க, மனக்கசப்புகளை மறக்க, அன்பை பெருக்க, இறைவனை உணர, யோகம் தியானம் செய்து உங்களை நீங்களே உணர என மிக நல்லமுறையில் பயன்படுத்துங்கள்.

வீட்டு பெரியவர்கள் குழந்தைகள் அனைவரும் கலந்து பேசி, கூடி விளையாடி, ஒன்றாய் சோறு சமைத்து, சேர்ந்து சாப்பிட்டு நீங்கள் வாழும் வீட்டை அன்பின் கோவில் ஆக்குங்கள். சிறு சிறு பூசல்கள் மறைந்து வீடு இனி நிரந்தர சொர்க்கமாகும்.

நம்மில் சிலர் அலுவல் நிமித்தமாக நம் உடல் வீட்டை விட்டு பிரிந்திருந்தாலும் நம் மனதை போலவே அலைபேசியும் இணையமும் எல்லை கடந்து நம்மை இணைக்கும் கவலை வேண்டாம்.

இது நமக்கு எளிதில் கிடைக்காத ஒரு அரிய சந்தர்ப்பம் என்பதை உணருங்கள், அதைகொண்டாடி மகிழுங்கள். வாழ்வு நம் கையில் அதை சொர்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம் மனம்தான். அதனால் மனதை வசப்படுத்துங்கள் உலகை வெல்லுங்கள். பூசல்களை மறந்து உங்களுடன் இருப்பவர்களிடம் அன்பு பேணுங்கள், அவர்களின் நலன் நாடுங்கள், வாழிடத்தை ஒரு சொர்க்கமாக மாற்றுங்கள்.

வாழ்நாளில் மீண்டும் கிடைக்காத, மறக்கமுடியாத நாட்கள் இவை, இதன் ஒவ்வொரு கணத்தையும் இனிதாய் நினைவில் வைத்துக்கொள்ள, உபயோகமாக பயன்படுத்த உறுதி பூணுங்கள் வாழ்வில் வெற்றி காணுங்கள்.

அவசியப்பட்டால் அக்கம்பக்கத்தில் உள்ள இல்லாதோருக்கு உதவி செய்து கோவிலில் உள்ள தெய்வத்தை நேரில் காணுங்கள்.

நமக்காக இரவு பகலாக உழைக்கும் நல் உள்ளங்களுக்கு உங்கள் நன்றியை காணிக்கையாக்குங்கள்.

அரசின் நல்லெண்ணத்திற்கு செவி மடுத்திடுங்கள், வருங்காலத்தை வெளிச்சமாக்கிடுங்கள்.

தனிமை நம்மை வலிமையாக்கும். உலகை வெல்ல நமக்கு உரமாகும்.

தனிமையில் உங்கள் உடல் நலனுடன் மனநலமும் பேணுங்கள், அவை உங்களை காற்றில் மிதக்கும் இறகாய் மாற்றும், வாழ்வை சந்திக்க புது சக்தி பிறக்கும்.

21 நாட்கள் கழித்து வெளியுலகிற்கு வரும்பொழுது உங்களை நீங்களே புதிதாக உணர்வீர்கள். எதிலும் இனி அவசரம் இருக்காது விட்டுக்கொடுத்தல் எளிதாகும், புன்சிரிப்பு உங்கள் உதட்டின் வசமாகும்.

குடும்பத்தின் மேன்மை புரியும், அவர்களுக்காய் வாழ மனதும் இசையும்.

அகங்காரத்தை மறந்திடுங்கள், அன்பால் வசப்படுங்கள்.

சேமிப்பின் அவசியம் விளங்கும், கனவுகள் வசப்பட இனி புது வழியும் பிறக்கும்.

பகையும் நட்பாகும், உலகம் உங்கள் வசமாகும்.

இந்த உலகம் புதிதாக தோன்றும் அதன் பல புதிய பரிமாணங்களும் புலப்படும்.

வாழ்க்கை புதிதாய் அழகாய் வித்தியாசப்படும். அதன் அர்த்தம் விளங்கும்.

இனி நமக்கு தெருவில் நடக்கும் சிறு சிறு சண்டைகள் சிரிப்பை வரவழைக்கும். சில நாட்கள் முன் நாமும் இப்படிதான் இருந்தோம் என்பது சிறிதாய் நெருடும் அவர்களுடன் மன்னிப்பு கேட்கவும் மனம் விழையும்.

நோய் தடுக்க தனிமைப்படுங்கள் மனதால் ஒன்றுபடுங்கள்.

தேசம் காக்க தனிமைப்படுங்கள் அன்பால் பிரபஞ்சத்தின் எல்லைகளையும் கடந்து செல்லுங்கள்.

உலகம் வாழ தனிமைப்படுங்கள் உங்கள் உள்ளுக்குள் பயணப்படுங்கள்.

நேர்மறையாக சிந்தித்தால் தனிமை சாபமல்ல அது ஒரு வரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *