2021-22-க்குள் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வரும் 2021-22-ஆம் ஆண்டுக்குள் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில் (சிசிஇஏ) இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், 200 படுக்கை வசதிகள் கொண்ட மாவட்ட மருத்துவமனையுடன் இந்தப் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். இதேபோல், மேல்சிகிச்சைக்காக வெளியூர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை பரிந்துரைக்கும் அரசு வட்டார மருத்துவமனைகளிலும், புதிதாக உருவாகும் மாவட்டங்களிலும்  இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதால், கூடுதலாக 15,700 எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு இடங்கள் உருவாக்கப்படும். புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதால், மாவட்ட மற்றும் வட்டார மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், அந்த மருத்துவமனைகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை அளிக்கக் கூடிய மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ரூ. 24,375 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.