ஹிந்து ஆன்மீக சேவை கண்காட்சி இந்த வருடம் (11 வது) ‘ பெண்மையைப் போற்றுதும்’ என்ற உயரிய சிந்தனையை மையக்கருத்தாகக் கொண்டு நடை பெற்றது.
இந்த ஆண்டு ‘ பெண்மையைப் போற்றுதும் ‘ என்ற முத்திரை வாசகத்தையும் தொன்று தொட்டு நாம் தெய்வமாய்ப் போற்றும் அன்னை கண்ணகியை முத்திரைப் பதுமையாகவும் கொண்டு கண்காட்சி நடத்தப்பெற்றது. அனுசூயா, அருந்ததி, சாவித்திரி போன்ற மாதரசிகளும் உண்டு.
கடந்த சில ஆண்டுகளாகவே கண்காட்சி அமைப்பினர், வனம்- வன விலங்குகள் பாதுகாப்பு, சூழலியல் பாதுகாப்பு, சுற்றுச்சூழலைப் பராமரித்தல், குடும்பம் மனித விழுமியங்களை ஊக்குவித்தல், மகளிர் மாண்பினைப் போற்றுதல், தேசபக்தியை ஊக்குவித்தல் என்ற 6 கருத்துகோள்களுடன் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்தி வருகின்றனர். இவையெல்லாம் பொதுவாக 5 நட்சத்திர ஹோட்டல்களில் கருத்தரங்கங்களில் மிகுந்த பொருட் செலவில் நுனி நாக்கு ஆங்கிலத்தில் உரையாடும் நபர்களின் பத்திரிகைளில் இடம் பெறுவதற்கு புழக்கத்தில் உள்ள சொற்கள். ஆனால் அவை எளிய பெண்மணிகள் குடும்பத்தையும் தாங்கள் பங்குபெறும் சமூக அமைப்புகளையும் பொறுப்பாக இரண்டையும் சமநிலை தவறாமல் நிர்வகித்துச் செல்லும் பெண்மணிகளால் தத்தம் ஊர்களில் ஆரவாரமின்றி நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதுதான், பத்தாண்டுகளில் மெல்ல வளர்ந்து வரும் நிறைவளிக்கும் மாற்றங்கள். தாய்மையின் ஆற்றலால் (மாத்ரு சக்தி) ஆகாததும் உண்டோ ?
கண்காட்சியின் வழிகாட்டியான எஸ்.குருமூர்த்தி விஜயபாரதத்திற்கென தரும் தகவல்: ‘‘2009ல் 30 நபர்கள் பங்கேற்புடன் துவக்கப்பட்ட முயற்சி இந்த ஆண்டு 4,200 பங்கேற்பாளர்களுடன் வளர்ந்து வருவதில் தேச நலம் நாடும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. மெல்ல மெல்ல அவரவர் சமூக கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டு அண்டை அயலார் சமூகத்தை நட்புணர்வுடன் வாழ்ந்து வர, தீண்டாமை – வேற்றுமைப் பகை என்கிற கூடாத உணர்வும் குறைய, நல்ல சூழ்நிலை உருவாகும்’’.