ஸ்டார்ட் அப் 20 உருவாக்கப்படும்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் வகையில் ‘ஜி 20’ நாடுகள் கூட்டமைப்பில் ‘ஸ்டார்ட் அப் 20’ என்ற குழுவை ஆரம்பிக்கும் முன்மொழிவை பாரதம் முன்வைத்துள்ளது. முன்னதாக, இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஜி 20 நாடுகளின் பொருளாதார பிரிவான பி 20 இந்தோனேசியா உலக கருத்தரங்கில் மத்திய தொழில் வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் அனுராக் ஜெயின் கலந்துகொண்டு பேசுகையில், “ரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. உணவு, எரிசக்தி பாதுகாப்பில் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி20 உறுப்பினர்கள், இந்த பிரச்சினைகள் அனைத்தையும் விவாதிக்க வேண்டும். உலகை முன்னோக்கி கொண்டு செல்ல சில கொள்கைகளை வகுக்க வேண்டும். உலகளவில் ஸ்டார்ட் அப்களுக்கு கிடைக்கும் வளர்ச்சி நிதி, வழிகாட்டுதல்கள், கொள்கை ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சவால்களால் அவை குறைந்துள்ளன. இதுபோன்ற பிரச்சனைகளை ஆலோசிக்க, பாரதம் ஒரு புதிய குழுவை முன்மொழிகிறது. பாரதத்தின் தலைமையிலான ஜி 20யின் கீழ் ஸ்டார்ட் அப் 20 அமைப்பு உருவாக்கப்படும். அறிவு, புதுமை, நீடித்தத்தன்மை ஆகியவை பொருளாதார வளர்ச்சியின் புதுயுக இயக்கிகளாக உருவெடுத்துள்ளன” என தெரிவித்தார். பாரதத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அபார வளர்ச்சி அடைந்துள்ளன. மத்திய அரசின் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தால் இளைஞர்களின் புது ஐடியாக்கள், முயற்சிகள், துவக்கங்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குவிகின்றன. இணைய வழி சேவைகள், மென் பொருள் துறை, ஆன்லைன் உணவு டெலிவெரி, ஆட்டோ, கார் புக்கிங், சுற்றுலா, ஓட்டல் துறை என பல துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோன்றி பல புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளதுடன் லட்சக்கணக்கானோருக்கு இப்போது வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.