நம் தேசத்தின் சுதந்திர உணர்ச்சிக்கும் ஒற்றுமை உணர்வுக்கும் எழுச்சிக்கும் அடிப்படையாக அமைந்தது ‘வந்தே மாதரம்’ என்ற ஒற்றைச் சொல். எனவே இது நம் தேசத்தின் தாரக மந்திரமாக மாறிப்போனது. இந்த மந்திரத்தை நமக்கு அளித்த ரிஷி பங்கிம் சந்திர சட்டோபாத்யாய. இந்த மந்திர சொல் அமைந்த கீதமே நம் தேசிய கீதமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கீதம் பிறந்த 150வது ஆண்டை இப்போது கொண்டாடுகிறோம். அதனைப் பற்றி…
நவம்பர் 7ஆம் தேதியன்று நாம் வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு உத்ஸவத்தில் நுழைய இருக்கிறோம். 150 ஆண்டுகள் முன்பாக வந்தே மாதரம் இயற்றப்பட்டிருந்தாலும், 1896ஆம் ஆண்டில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் முதன்முறையாக இதனைப் பாடினார். வந்தேமாதரம் பாடலில் கோடிக்கணக்கான நாட்டு மக்கள் எப்போதுமே தேசபக்தியின் எல்லையில்லா உணர்வுத் திவலைகளை உணர்ந்தார்கள். நமது தலைமுறைகள் ‘வந்தே மாதரத்தின்’ சொற்களிலே பாரதத்தின் உயிர்ப்புடைய, மகத்தான ரூபத்தைக் கண்டிருக்கிறார்கள். சுஜலாம், சுஃபலாம், மலயஜ சீதளாம், சஸ்ய சியாமளாம், மாதரம். வந்தே மாதரம். நாம் இப்படிப்பட்ட பாரத தேசத்தைப் படைக்க வேண்டும்.
நமது முயற்சிகளில் என்றைக்குமே கருத்தூக்கமாக வந்தே மாதரம் இருந்துவரும். அந்த வகையிலே நாம் வந்தேமாதரத்தின் 150ஆவது ஆண்டினை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக ஆக்க வேண்டும். வரவிருக்கும் தலைமுறையினருக்காக இந்தக் கலாச்சாரத் தொடரை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இனி வரும் காலங்களில் வந்தே மாதரத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் இருக்கும், தேசத்தில் பல நிகழ்ச்சிகள் நடக்கும். நாட்டுமக்களான நாம் அனைவரும் வந்தேமாதரம் என்ற இந்த பெருமைமிகு பாடலின் பொருட்டு, உள்ளெழுச்சியோடு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுடைய ஆலோசனைகளை #VandeMatram150 என்பதிலே அனுப்புங்கள். நாம் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை வரலாற்று பூர்வமானதாக ஆக்கும் பணியில் ஈடுபடுவோம்.
– பிரதமரின் இந்த அறைகூவலே வந்தே மாதர கீதத்தின் தன்னெழுச்சியை நமக்குப் புரியவைத்துவிடும்!
வந்தே மாதரம் பாடலின் ஓரிரு சொற்களை மாற்றியமைத்து, தேசம் முழுமைக்கும் வலம் வர வைத்தவர் ரவீந்திரநாத் தாகூர். அவரே வங்கத்தில் மட்டும் சுருங்கிக் கிடந்த இந்த மந்திரத்தை தேசிய எழுச்சிக்குக் காரணி ஆக்கினார்.
1896ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் அமர்வில் முதன்முறையாக அவரே வந்தே மாதரத்தைப் பாடினார். மாநாட்டுக்கான கீதத்தை வடிவமைத்த தாகூர், தம் மாகாணத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திரரின் வந்தே மாதர கீதத்தை ஓரிரு வரிகளில் திருத்தம் செய்து பாடினார்! ஏழு கோடி என்பதை பாரத தேசத்தின் முழுமைக்குமான மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு மாற்றினார். அதற்குக் கிடைத்த வரவேற்பும் பேரெழுச்சியும்தான், தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை ஜீவனுள்ள போராட்டமாக மாற்றி, இந்தத் தாய் நாட்டை வணங்குகின்ற, ‘தாயை வணங்குவோம்’ எனும் கோஷத்துடன் வந்தே மாதரம் எனும் சக்திமிகு மந்திரமாய் உருப்பெற்றது.
இந்தப் பாடலுடன், ஆனந்தமடம் நாவலின் ஒரு பகுதி முதன்முதலில் 1881ல் ‘வங்கதர்ஷன்’ பத்திரிகையில் (தொகுதி 7) வெளியிடப்பட்டது. அவரது காவிய நாவலான ஆனந்தமடம் ஏப்ரல் 1882ல் முழுதாக வெளியிடப்பட்டது. இந்த நாவல் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சன்னியாசி கிளர்ச்சியின் போது, பிரிட்டிஷ் காலனித்துவ சக்திக்கு எதிரான சுதந்திரப் போராளிகளின் முயற்சிகளை சித்திரித்தது. அதன் பின்னர், ஆங்கிலேயர்கள் அவரை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கினர். நாவலின் கணிசமான பகுதியை மாற்றுமாறு வற்புறுத்தினர். தொல்லையைத் தாங்க முடியாத அவர் 1885-−86ல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அவர் உருவாக்கிய மந்திரச் சொல்லான ‘வந்தே மாதரம்’, அடுத்த எழுபது ஆண்டுகள் பாரதத்தை ஆண்டது. ஆங்கிலேயரை விருப்ப ஓய்வு பெறச் செய்து நாட்டை விட்டே விரட்டி அடித்தது.
1896 செப்.28ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவிந்தரநாத் தாகூரால் பாடப்பட்ட பின்னர் 1905ல் கவிஞர் சரளா தேவி சௌதுராணி பனாரஸ் காங்கிரஸ் அமர்வில் தேசியப் பாடலாக இதனைப் பாடினார். லாகூரிலிருந்து, லாலா லஜ்பத் ராய் வந்தே மாதரம் என்ற பத்திரிகையை வெளியிட்டார். 1905ல் ஹிராலால் சென் தயாரித்த முதல் அரசியல் படத்தில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.
இந்தப் பாடல், பல்வேறு பாரதம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாரதத்தின் தேசியக் கொடியில் குறியீடாக வந்தேமாதரம் என்ற எழுத்துகள் சேர்க்கப்பட்டன. அதுவே இந்த மந்திரச் சொல்லின் மரியாதையை உணர்த்தும்!
“வந்தே மாதரம்” என்பது மக்கள் உள்ளங்களில் வெறும் பாடலாகப் புகவில்லை; தேசபக்தி, பக்தி மற்றும் பாரதியர்கள் தங்கள் தாய்நாட்டுடனான வலுவான உணர்ச்சிப் பிணைப்பின் சக்திவாய்ந்த வெளிப்பாடாக இதனைக் கண்டனர். இந்தப் பாடலின் வரிகள் தாய்நாட்டுக்கு அஞ்சலி செலுத்துகின்றன. பாரதத்தை தெய்வீகத் தாயின் உருவமாகச் சித்திரித்து, அதன் அழகு, வலிமை, கம்பீரத்தை மகிமைப்படுத்தின. தொடக்கத்தில் தாகூரால் இசையமைக்கப்பட்டு, மக்களின் உணர்வுகளைப் பேசும் ஒரு மெல்லிசையாக வலம் வந்தது. பின் பல வகைகளாகவும் விளக்கங்களாகவும் பரிணமித்து, இறுதியில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்கு எதிரான எதிர்ப்புணர்வின் அடையாளமாக மாறியது.
பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 24, 1950 அன்று, நாட்டில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய வந்தே மாதரம் பாடலை ஜன கண மன பாடலுடன் சமமாக மதிக்க வேண்டும் என்றும், அதற்கு சமமான அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சபையில் ஒரு பிரகடனத்தை முன்வைத்தார்.
சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள், அரசு விழாக்கள், பள்ளிக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் உட்பட தேசிய நிகழ்வுகளில் இசைக்கப்படுகிறது. மகாகவி பாரதி வந்தேமாதர கீதத்தின் தமிழாக்கமாக இரு வடிவங்களை அளித்தார். இதன் பெருமையை இந்த 150ம் ஆண்டில் மேலும் வளர்க்கச் செய்வோம் !
தமிழகத்தில் எதிரொலித்த வந்தேமாதரம்
வங்கத்தின் குரல்
தமிழகத்தில் எதிரொலி
வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, நீலகண்ட பிரம்மசாரி, வ.வே.சு. ஐயர் போன்றவர்களை மையமாகக் கொண்டு புரட்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1905ல் நடைபெற்ற வங்காளப் பிரிவினை பாரத அரசியலில் ஒரு சூறாவளியை ஏற்படுத்தியது. ‘வந்தே மாதரம்’ என்ற தாரக மந்திரம் காட்டுத் தீ போல் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. இத்தாரக மந்திரத்தால் கவரப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள், தமது வக்கீல் தொழிலை உதறி தள்ளிவிட்டு, முழு மூச்சுடன் சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டார்.
நெல்லையில் சுதந்திர முழக்கம்
1906-ல் வ.உ.சி ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்’ கம்பெனி’யை ஆங்கிலேயருக்கு எதிராக மக்களின் ஆதரவினாலும், பண பலத்தாலும் தூத்துக்குடியில் துவங்கினார். வ.உ.சி. மற்றும் சுப்பிரமணிய சிவா அவர்களால் தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகள் முழுவதும் ‘வந்தே மாதர முழக்கம்’ மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலிக்க, ‘வந்தே மாதரம் பிள்ளை’ என மக்கள் அழைக்கும் அளவிற்கு தென்னாடு முழுவதும் வந்தே மாதரத்தை பரவச் செய்தார். சேலத்தில் உள்ள பாப்பாரப்பட்டி என்கிற ஊரில் பாரத மாதாவுக்கு கோயில் அமைக்க வேண்டும் என்ற கனவு சுப்ரமணிய சிவா அவர்களுக்கு இருந்தது.
லண்டனில் தமிழகப் புரட்சி வீரர்கள்
சென்னையைச் சார்ந்த திருமலாச்சாரியார் பாரீஸ் சென்று, சியாம்ஜீ கிருஷ்ண வர்மா, மேடம் காமா ஆகியோருடன் தொடர்புக் கொண்டார். சியாம்ஜீ கிருஷ்ண வர்மா லண்டனில் ‘இந்தியா ஹவுஸ்’ என்கிற ஸ்தாபனத்தை நிறுவி, சீமைக்கு வந்து கொண்டிருந்த புரட்சிவாதிகளுக்கெல்லாம் ஊக்கமளித்து வந்தவராவார். தமிழகத்தில் இருந்து டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் மற்றும் வ.வே.சு. ஐயர், லண்டனுக்குச் சென்று அங்கு வீரசாவர்க்கர், லாலா ஹர்தயாள் போன்றவர்களுடன் தொடர்புக் கொண்டு லண்டனில் ‘வந்தே மாதரத்தை’ முழங்கினார்கள். 1909ல் செப்டம்பரில் லாலா ஹர் தயாள் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘வந்தே மாதரம்’ பத்திரிகை வெளிவந்தது. மேடம் காமா தன்னுடைய நேரத்தை ‘வந்தே மாதரம்’ அச்சிடுவதிலும் பொதுமக்களுக்கு அதை வினியோகிப்பதிலும் செலவிட்டார். அரசாங்கத்திற்கு பத்திரிகை வெளிவருவது சம்பந்தமாக தகவல் தெரிந்ததால், ஜெனீவாவில் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டு, ஹாலந்தில் ரோட்டர்டேமில் அந்தப் பத்திரிகை அச்சிடப்பட்டது. அந்தப் பத்திரிகையின் பிரதிகள் வட பாரதம் மட்டுமல்லாது, சென்னைக்கும் மிக ரகசியமாக வந்து சேர்ந்துகொண்டு இருந்தது. புரட்சிக் கருத்துகள் நிறைந்த பத்திரிகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் ஏராளமாக அச்சிடப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
கொடிகாத்த குமரன்

காந்தியடிகளின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய பின்பும் ‘வந்தே மாதர கோஷத்தால்’ உந்தப்பட்டு நிகரில்லா தியாகங்கள் புரிந்த பல தேசபக்தர்கள் தமிழகத்தில் தோன்றினர். கொடி காத்த திருப்பூர் குமரனை தமிழ்நாட்டில் யாராலும் மறக்க முடியாது. திருப்பூர் குமரன் தலைமையில் இளைஞர்கள் பலர் கடைகள் நிரம்பிய தெருக்கள் வழியே, சுதந்திரக் கொடி பிடித்த வண்ணம்,’ வந்தே மாதரம்’ என சொல்லிக்கொண்டுச் சென்றிருந்தார்கள். எது வந்தாலும் தாங்கக் கூடிய மனத்தெளிவுடன் அவர்கள் முன்னேறி கொண்டிருந்தார்கள். அச்சமயம் திடீரென்று ஒரே கூச்சல். குழப்பம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடுமாறு பெரியவர்கள் பணித்தார்கள். ஆனால், குமரனால் அவ்வாறு செய்ய அவரது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. அவர் முன்னேறுவதைக் கண்ட போலீசார் அவரை கடுமையாக தாக்கினார்கள். மேலும், மேலும் அடித்துக்கொண்டே இருந்தார்கள். அப்பொழுதும், அவர் வாய் ‘வந்தே மாதரம்’ என்று முனகிக் கொண்டே இருந்தது, கொடி கீழே விழாமல் கையில் கெட்டியாக பிடித்தவண்ணம் இருந்தார். ரத்த வெள்ளம் ஆறாக ஓடியது. கடைசியில் அவர் கீழே விழ நேரிட்டதும், அவர் உயர பிடித்திருந்த கொடியும் அவர் மேல் போர்வையாக விழுந்து, அம்மாவீரனுக்கு பாரதத்தாய் தனது அஞ்சலியை செலுத்தியது. 1931ம் ஆண்டு ஜனவரி 11-ம் நாள். குமரன், தாய் நாடு விடுதலை அடைய தன்னை அர்ப்பணித்துக்கொண்ட புனிதநாளாகும். பாரத மக்கள் உள்ளங்களிலே சுதந்திர அவா மங்காமல் நிலைத்திருக்கும் வரையில் கொடிகாத்த குமரனை நம்மால் மறக்க இயலாது.
நூற்றாண்டில் நடந்த நிகழ்வு
“வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு இது. நாம் இதை விமரிசையாக கொண்டாட வேண்டும்” என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 26ல், மனதின் குரல் நிகழ்ச்சியில் அறைகூவல் விடுத்ததுமே, பல சென்னை ஸ்வயம்சேவகர்களுக்கு வந்தே மாதரத்தின் நூற்றாண்டு விழாவை, 1975ல் கொண்டாடிய பசுமையான நினைவு மனத்திரையில் தோன்றியது.
அப்போது நெருக்கடி நிலை அமலில் இருந்தது. சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கும் சத்தியாகிரகைகள் கைதாகும் போது, “பாரத் மாதா கி ஜெய்”, “வந்தே மாதரம்” என்று முழக்கம் இடுவார்கள். அதி புத்திசாலிகளான சில காவல்துறை அதிகாரிகள் “வந்தே மாதரம் போன்ற ஆட்சேபகரமான கோஷங்கள் எழுப்பினார்கள்” என்று குற்றச்சாட்டு பதிவு செய்த சம்பவங்களும் நடந்தன!
தேசத்தின் சுதந்திரத்திற்கு தாரக மந்திரமான வந்தே மாதரம் சிலரால் இப்படி தப்பும் தவறுமாக புரிந்து கொண்ட சூழல். இந்த சூழலில் தான், சென்னை சேத்துப்பட்டு உலக பல்கலைக்கழக சேவை மைய அரங்கில் வந்தே மாதர நூற்றாண்டு விழாவை வித்யார்த்தி பரிஷத் பதாகையில், ஸ்வயம்சேவகர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். மாநில கல்வித்துறை ஆணையர் ரங்கபாஷ்யம் விழாவை தொடங்கி வைத்து குத்து விளக்கு ஏற்றினார். அந்த நேரம் பார்த்து அரங்கமே அதிரும் வண்ணம் “வந்தே… மாதரம்!” என்று கர்ஜித்தார், ஒரு இளம் ஸ்வயம்சேவகர். அனைவருக்கும் மகிழ்ச்சி.
முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஜே.பி. கிருபளானி, என்.எஸ் வரதாச்சாரியார், கல்வியாளர் குலபதி பாலகிருஷ்ண ஜோஷி, எழுத்தாளர் த.நா. குமாரசுவாமி போன்ற பலரும் வந்தே மாதரம் கீதத்தின் வரலாற்றை நினைவு கூர்ந்தார்கள். மையத்தின் இயக்குனர் பேராசிரியர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். சர்வாதிகார அரசு பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு போட்டிருந்தது. அநேகமாக தியாக பூமி வார இதழில் மட்டும் வந்தே மாதரம் நூற்றாண்டு விழா செய்தி வெளியாயிற்று.

