பாரத ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் புதிய திருக்கோவில்

புதிய பாராளுமன்ற கட்டிடம்இது தேவையா?

மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதை  எதிர்க்க வேண்டும் என நினைப்பவர்கள், எதிர்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.  அதில் உள்ள  நன்மைகள், தீமைகளை அலசி ஆராய்ந்து பார்க்கும் போது, நன்மைகளே அதிகமாக உள்ளது என பல சந்தர்ப்பங்களில், கண் கூடாக நாம் பார்த்து இருப்போம். அது போல, புதிய பாராளுமன்றக் கட்டிடம் பற்றி பல்வேறு சர்ச்சைகள், உலா வந்து கொண்டு இருக்கும், இந்த சூழ்நிலையில், அது ஏன் தேவை என்பதை ஆராய்ந்து அறிந்து பார்த்தால், நிறைய நன்மைகள் உள்ளடங்கி இருப்பது தெரிய வருகின்றது.

New Parliament building will be bigger in size and have more amenities - The Hindu

தொகுதிகள் சீரமைப்பு:

மக்களவையில் (Lok Sabha) மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. அந்த, 543 பேரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  ஆங்கிலோ இந்தியன் வகுப்பைச் சேர்ந்த இருவர்‌ குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட வேண்டும். தற்போதைய மத்திய அரசு, ஜனவரி 2020 அன்று, 104 வது சட்ட திருத்தம் மூலம், அந்த நடை முறையை நீக்கியது.

மாநிலங்கள் அவையில் (Rajya Sabha), மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. அதில், 233 பேர் மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப் படுவார்கள். மீதமுள்ள 12 பேர், குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுவார்கள்.

நம் நாட்டில் இதுவரை நான்கு முறை தொகுதிகள் சீரமைக்கப் பட்டு உள்ளன. 1952, 1963, 1973, 2002 என நான்கு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தொகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள மக்கள் தொகையின் படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்க வேண்டும்.

1976 ஆம் ஆண்டு அமல்ப்படுத்த வேண்டியது, ஆனால், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சியின் போது, இதை அமல்படுத்தாமல் நிராகரித்து விட்டார்.

1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற விகிதம் இருந்தது. காலப் போக்கில், தற்போது பீகாரில் 25 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எனவும், மத்திய பிரதேசத்தில் 30 லட்ச வாக்காளர்களுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எனவும், நாடு முழுவதும் ஏறத்தாழ 20 முதல் 25 லட்சத்திற்கு, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என இருக்கின்றது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பது விதி. எனவே அதற்கேற்ப நாடாளுமன்றமும் மாற்றி அமைக்க வேண்டிவரும்.

New Parliament Building To Cost Around Rs 970 Crore': Centre In Lok Sabha - Nagaland Page

புதிய பாராளுமன்ற கட்டிட சிறப்பு அம்சங்கள்:

– மக்களவையில் (Lok Sabha) 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் (Rajya Sabha) 384 உறுப்பினர்களும் அமரும் வகையில் எண்ணிக்கை அதிகப் படுத்தப்பட உள்ளது. இரு அவைகளிலும் சேர்ந்து, 1272 உறுப்பினர்கள் அமரும் வகையில் இடங்கள் அதிகப் படுத்தப்பட உள்ளது.

– நமது நாட்டின், பாரம்பரிய வரலாற்று சிறப்பம்சங்கள், மைய அறையில், இடம் பெறும் வகையில் வடிவமைக்கப் பட உள்ளது.

– மக்களவையில் (லோக் சபா) நமது தேசிய பறவையான மயில் போலவும்,

– மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) நமது தேசிய மலரான தாமரை போலவும்,

– பொதுவான மைய அவை நமது தேசிய மரமான ஆலமரம் போல வடிவமைக்கப் பட  உள்ளது.

– 64 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், குடியரசுத் தலைவர் தங்கியிருக்கும் ராஷ்டிரபதி பவனுக்கு மிக அருகில், புதிய பாராளுமன்ற வளாகம், 971 கோடி செலவில், நமது நாட்டின் 75 வது சுதந்திர விழா வருடமான 2022 க்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

– தற்போது பாராளுமன்றத்தில் இரு உறுப்பினர்கள் இடையே உள்ள இருக்கையின் இடைவெளி, 40 முதல் 50 சென்டி மீட்டர் மட்டுமே. அந்த இருக்கைகளின் இடைவெளியை அதிகப்படுத்தும் வசதியும் செய்யப்பட உள்ளது.

– மேலும், உறுப்பினர்களுக்கு அருகாமையில் ஒரு மேஜை இருக்கும். அதில், தங்களுடைய பொருட்களை உறுப்பினர்கள் வைத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டு இருக்கும்.

– நவீன தொழில் நுட்பத்துடன், விசாலமான பார்க்கிங் வசதியுடன், நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதை தாங்கும் சக்தியுடன், அனைத்து சிறப்பு அம்சங்களையும் நினைவில் கொண்டு கட்டப்பட உள்ளது.

– பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், முக்கிய அதிகாரிகளின் அலுவலகங்கள், ஒரே குடையின் கீழ் செயல்படும். அனைத்து முக்கிய அலுவலகங்களும் அருகருகே இருப்பதால், நேர விரயமும், வீண் அலைச்சலும் இருக்காது.

– கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை, ஏலத்தின் மூலம் டாடா நிறுவனம் எடுத்து உள்ளது.

தற்போதைய கட்டிடம்:

தற்போது உள்ள பாராளுமன்ற வளாகம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. எட்வின் லுட்யன்ஸ் (Edwin Lutyens) மற்றும் ஹெர்பபேர்ட் பேக்கர் (Herbert Baker) வடிவமைத்து, பிப்ரவரி 12, 1921 ஆம் தேதி அடிக்கல் நாட்டி, 83 லட்ச ரூபாய் செலவில், ஆறு வருடங்களில் முடிவு அடைந்தது.

1927 ஜனவரி 18 அன்று, அன்றைய கவர்னர் ஜெனரல் லார்டு இர்வினால் (Lord Irwin), தற்போதைய பாராளுமன்ற வளாகம் திறக்கப் பட்டது.

Central Vista Redevelopment: Six Things You Should Know About the New Parliament

ஏன் தேவை புதிய கட்டிடம்:

தற்போது உள்ள பாராளுமன்ற வளாகம், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அப்போது உள்ள தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்டு உள்ளது. தற்போது பல தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டன. நிலம் நடுக்கத்தை தாங்கும் வகையிலும், நவீன தொழில் நுட்பத்துடன், பல்வேறு வசதிகளுடன், அடுத்து பல வருடங்களுக்கும் தாங்கி நிற்கும் படியாக, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், புதிய பாராளுமன்றம் கட்டப்பட உள்ளது.

குறிப்பாக, பல மொழி பேசுபவர்களும் இருப்பதால், அவரவர் விருப்பத்திற்கு  ஏற்ப, அவரவர் விரும்பும் மொழிகளில், கேட்கும் வகையில், பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும், அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இருப்பதால், வேலைகள் சீக்கிரம் நடைபெறும்.

பல்வேறு அலுவலக கட்டிடங்கள்,  வாடகைக்கு உள்ளது. அதன் மூலம், வருடம் தோறும், ஆயிரம் கோடி செலவிடப் படுகின்றது. புதிய கட்டிடத்தின் மொத்த தொகையே 927 கோடி.

செலவிட இருக்கும், மொத்த பணத்தையும், ஒரே வருடத்தில், லாபம் பெற்று விடலாம் என்பதே எதிர் பார்ப்பு.

ஏற்கனவே  இருக்கும் பாராளுமன்ற வளாகம், அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, மற்ற பணிகளுக்கு பயன் படுத்தப்படும்.

ஊரடங்கு காலத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஒரு கட்டிடம் தேவையா?:

கொரோனாவால் மக்கள் அனைவரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தங்களுடைய வேலை வாய்ப்புகளும், வியாபாரமும் இழந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் துயரை போக்க, வருமானம் மிகவும் அவசியம். ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில், வேலை கிடைப்பது அரிதாகி வருகின்றது.

இந்த கட்டிட கட்டுமானம் மூலமாக, 2000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 9000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.

இந்த கொரோனா நேரத்தில், ஊரடங்கு காலத்தில், இன்னல் பட்டுக் கொண்டு இருக்கும் மக்களுக்கு, வருமானம் என்பது மிகவும் உதவிகரமாக இருக்கும். அவர்களின் வாழ்க்கையும் மேம்படும், என்பதே நிதர்சனமான உண்மை.

தமிழ்நாட்டில் எதிர்ப்பு வருகின்றதே?:

கலைஞர் ஆட்சியில் இலவசமாக தொலைக் காட்சியை தருவதற்காக, 3,742 கோடி செலவிடப் பட்டது. அப்போது அதை யாரும் தட்டி கேட்கவில்லை. மக்களின் வரிப் பணத்தை கொண்டு, மக்களுக்கு சேவை செய்கின்றோம், என கூறினார்கள். அதன் மூலம், அரசுக்கு எந்த வருவாயும் இல்லை. ஆனால், புதிய வளாகம் மூலமாக, வருடத்திற்கு ஆயிரம் கோடி மிச்சமாகிறது. இதன் மூலம், நமது நாட்டிற்கு, பெருமளவில் வருமானம் ஏற்படும்.

காங்கிரஸ் எதிர்த்து வருகின்றதே?:

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அன்றைய மக்களவை சபாநாயகர் திருமதி மீரா குமார் அவர்கள், ஜூலை 13, 2012 ஆம் ஆண்டு ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். அதில், தற்போது உள்ள பாராளுமன்ற வளாகம், மிகவும் பழமை வாய்ந்தது எனவும், 2026 ஆம் ஆண்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தும் போது, இது போதுமானதாக இருக்காது எனவும், புதிய கட்டிடத்தை கட்ட ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரி இருந்தார். அந்த கடிதத்தினுடைய நகல், டைம்ஸ்  நவ் நாளிதழில், டிசம்பர் 11, 2020 அன்று வெளி வந்தது.

அன்று உள்ள பொருளாதார சூழ்நிலையால், செய்ய முடியாததை, தற்போது, ஆளும் மத்திய அரசு, செய்து வருகின்றது.

2008 ஆம் ஆண்டில், திமுக ஆட்சி காலத்தில், புதிய தலைமைச் செயலகம் 12,000 சதுர மீட்டரில் கட்ட, செலவு செய்யப்பட்ட தொகை சுமார் 479 கோடியே 50 லட்சம். ஆனால், தற்போது 64,500 சதுர மீட்டரில்,  புதிய பாராளுமன்றம் வளாகம் கட்ட, மத்திய அரசு செலவு செய்ய இருக்கும் தொகையோ 972  கோடி மட்டுமே.

பாராட்டுக்கு உரியதே:

தனக்காக எதுவும் சேர்த்து வைக்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளின் வசதிக்காக, நாட்டுக்காக, ஒரு புதிய வளாகத்தை நவீன வசதிகளுடன் நிறுவ இருக்கும் மத்திய அரசை குறை கூறுபவர்கள், நிச்சயமாக, மோடி எதிர்ப்பாளராக தான் இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

புதிய வளாகம் தேவை என்பதை முன்பே உணர்ந்ததால் தான், தற்போதைய மத்திய அரசு, கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றது.

“வெள்ளம் வரும் முன்பே, அணை போட வேண்டும்” என்பது போல, பின்னர் வரும் சூழ்நிலையை புரிந்து கொண்டு, முன்பே செயலாற்றும் அரசு தான், சிறப்பு வாய்ந்த அரசு. அதை புரிந்து, உணர்ந்து, செயல் படுத்தும் மத்திய அரசு, நிச்சயமாக பாராட்டுக்கு உரியதே.

அ.ஓம்பிரகாஷ்

One thought on “பாரத ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் புதிய திருக்கோவில்

Comments are closed.