மிசோரம் தேர்தலில் மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் எதிர்க்கட்சியாக இருந்த ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த மிசோ தேசிய முன்னணி வெறும் 10 இடங்களை மட்டுமே வென்றது.
இதையடுத்து ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டுஹோமா, மிசோரம் புதிய முதல்வராக நேற்று பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் ஹரி பாபு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். லால்டுஹோமா அமைச்சரவையில் 7 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 4 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். ஜோரம் மக்கள் இயக்கத்தின் செயற் தலைவர் சப்தங்கா, வன்லால்ஹலானா, லசாவிவுங்கா, லாதன்சங்கா, வன்லத்லானா, வன்லால்ருதா, லால்ரின்புயி ஆகியோர் இணை அமைச்சர்களாக (தனிப் பொறுப்பு) பொறுப்பேற்றனர்.
மிசோரம் முதல்வராக பதவியேற்றுள்ள லால்டுஹோமா(74) ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியாவார். பதவியேற்றபின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
விவசாயிகள் நலன், நிதி சீர்திருத்தங்கள், ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை ஆகிய 3 விஷயங்களில் எனது அரசு கவனம் செலுத்தும். மாநில விவசாயிகளுக்கு உதவ இஞ்சி, மஞ்சள், மிளகாய், துடைப்பம் ஆகியவை, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு கொள்முதல் செய்யும். இவ்வாறு லால்டுஹோமா தெரிவித்தார்.