சுயசார்பை பெறும் வகையில், 101 வகையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இதன் மூலம், 2025க்குள், இந்த ஆயுதங்களின் இறக்குமதி நிறுத்தப்படும்.
ராணுவத்துக்கான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதலில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து, இந்தியா தான் அதிக அளவில் செலவிடுகிறது. நாட்டின் ராணுவத் தேவைகளில், 60 – 65 சதவீதம், இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக பல்வேறு நாடுகளுடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 101 வகையான ஆயுதம் மற்றும் தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, ராஜ்நாத் சிங் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: பல்வேறு துறைகளில், சுயசார்பு நிலையை அடைய வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இலகு ரக ஹெலிகாப்டர்
ராணுவ ஆயுதத் தயாரிப்பிலும் சுயசார்பை அடையும் வகையில், 101 வகையான ஆயுதங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆயுதங்கள் இறக்குமதிக்கான தடை, 2025க்குள் முழுதுமாக அமலுக்கு வரும். ஆயுதங்களின் தன்மையை பொறுத்து, அதை நம் நாட்டில் தயாரிப்பதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், இந்த தடை, குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்தப்படும்.
தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள, 101 வகையான ஆயுதங்களின் இறக்குமதிக்காக, 2015 – 2020 கால கட்டத்தில், 3.5 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதன்படி பார்க்கும்போது, அடுத்த, ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்குள், உள்நாட்டு ஆயுத தயாரிப்பாளர்களுக்கு, கூடுதலாக, 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான ஒப்பந்தங்கள் கிடைக்க உள்ளன.இ
லகு ரக ஹெலிகாப்டர்கள், போக்குவரத்துக்கான விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், ஏவுகணைகள் என, பல முக்கிய ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள், இந்த தடை பட்டியலில் வருகின்றன.முப்படைகள், உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பாளர்கள் உட்பட பலருடன் கலந்தாலோசித்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சுயசார்பு நிலையை நாம் எட்ட முடியும். உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
நம் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் வாங்க, அடுத்த, ஐந்து ஆண்டுகளில், 9.75 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. அதில் மிகப்பெரிய பங்கு, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க உள்ளது.
முப்படை
இதைத் தவிர, நடப்பு, 2020 – 21 நிதியாண்டுக்கான ராணுவ பட்ஜெட், இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அதில், உள்நாட்டு பொருட்கள் வாங்குவதற்காக, 52 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.முப்படைகளின் தேவைக்கு ஏற்ப, அவற்றை தயாரிக்க உள்நாட்டு நிறுவனங்கள் தயாராவதற்கு கால அவகாசம் அளித்தே, படிப்படியாக, இந்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முதல்கட்டமாக, 2020, டிச.,க்குள், 69 பொருட்கள் மீதான இறக்குமதி தடை அமலுக்கு வருகிறது. அதன்பிறகு, 2021, டிச.,க்குள், மேலும், 11 ஆயுதங்களுக்கான தடை அமலாகும். இவ்வாறு, அவர் கூறினார்.
கோஷம் தான் பெரிசு!
ராணுவ அமைச்சர் ராஜ்நாத்தின் அறிவிப்பு குறித்து, காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரம், சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: இந்த அறிவிப்பு தொடர்பாக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முதலில் வெளியிட்ட முன்னோட்டத்தை பார்த்தபோது, மிகப்பெரிய சத்தம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் அது வெறும் முனகல் சத்தமாகவே அமைந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கும்போது, அதை பயன்படுத்துவது, நம் ராணுவம் மட்டுமே. இது தொடர்பாக, தன் துறை செயலருக்கு, ஒரு கடிதத்தை மட்டும் அமைச்சர் எழுதியிருந்தால் போதுமே.தற்போதைய அறிவிப்புகளின் அர்த்தம், அடுத்த, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள், இந்த ஆயுதங்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளோம். அதன்பிறகு, இறக்குமதியை நிறுத்த உள்ளோம் என்பது தானே.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
முழுமையான தடைக்கு சம்மேளனம் கோரிக்கை
அகில இந்திய பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள் சம்மேளனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாதுகாப்புத் துறையில் தளவாட பொருட்கள் இறக்குமதிக்கு, முழுமையாக தடை விதிக்க வேண்டும். ஆவடி படைத் துறை உடைத் தொழிற்சாலையில், புல்லட் புரூப் ஜாக்கெட் வடிவமைத்து, உருவாக்கி, தமிழகம் உட்பட, பல்வேறு போலீசாருக்கும் வழங்கப்பட உள்ளது. இவற்றை, பாதுகாப்பு தொழிற்சாலைகளில் தயாரிக்க அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.