நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் மட்டும், ஏறத்தாழ 1.36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதை ஜி.எஸ்.டி., புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய நிதியமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுதும் வரி ஏய்ப்பை கண்டறிய, ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம் சார்பில், புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், கடந்த 2022 – 23ம் ஆண்டில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. மேலும், நடப்பு நிதியாண்டு துவங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில், முந்தைய ஆண்டை விட வரி ஏய்ப்பு அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், இதுவரை 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,040 போலி உள்ளீட்டு வரி தாக்கல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட, 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த 2020 ஏப்ரல் முதல், 2023 செப்டம்பர் வரை, 57,000 கோடி ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி., ஏய்ப்பு செய்த 6,000த்துக்கும் மேற்பட்ட போலி ஐ.டி.சி., தாக்கல்கள் கண்டறியப்பட்டு, மொத்தம் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம், கடந்த ஜூன் மாதம் முதல் ஜி.எஸ்.டி., அமைப்பை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் கண்டறிந்து கைது செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.