உலகில் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட லட்சியத்திற்காக இறைவன் படைத்துள்ளான். உலகத்துக்கு ஆன்மிக எழுச்சி உண்டாக்குவதற்காக படைக்கப்பட்ட நாடு பாரதம் என்றார் சுவாமி விவேகானந்தர். இங்கு தான் ஒவ்வொரு சாதாரண மனிதனும் கூட மதத்தைப் பற்றி கேட்டால் ஒரு பெரிய சொற்பொழிவே ஆற்றுவான். இது தான் நமது தேசிய வாழ்க்கை முறை என்றார் விவேகானந்தர்.
சென்னையில் சேவாபாரதி சார்பாக குடிசை பகுதிகளில் சித்திரைப் புத்தாண்டு அன்று நடைபெற்ற துறவிகள் யாத்திரை நிகழ்ச்சியில் இதை கண்கூடாக காண முடிந்தது. அன்று சென்னையில் சுமார் 50 துறவிகள் 80க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகளுக்கு விஜயம் செய்து ஒவ்வொரு வீட்டிலும் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு துறவியும் காலையில் ஒன்று மாலையில் ஒன்று என இரண்டு குடிசை பகுதிகளுக்கு விஜயம் செய்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் தந்த வரவேற்பையும், காவி உடை மீது சாமானியர் கொண்ட பக்தியையும் பார்க்க முடிந்தது.
அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஹிந்துத் துறவிகள் மீது விஷத்தைக் கக்கினாலும் சாதாரண மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரியவந்தது. துறவிகள் தங்கள் தெருவுக்கு வந்தவுடன் தாய்மார்களும், பெரியவர்களும் துறவியை வரவேற்று துறவிக்கு பாத பூஜை செய்து பணிவுடன் வீட்டிற்கு அழைத்து சென்று பூஜை அறையில் துறவியின் கையால் புத்தாண்டு அன்று விளக்கேற்றியது அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவமாக அமைந்தது.
துறவிகளுக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும். என் வாழ்க்கையில் இந்த நாள் ஒரு மறக்க முடியாத தினம் என்று பல துறவிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இனி இதைப்போன்ற குடிசை பகுதிகளுக்கு எப்போது அழைத்தாலும் வர தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சேது மாதவன், வன்னியராஜன், பி.எம். ரவிக்குமார், சேவா ப்ரமுக் பத்மகுமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தேசிய அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.