ஒரே ஒரு ராஜ்யசபா, ‘சீட்’டுக்கு நடந்த தேர்தல், ஹிமாச்சல பிரதேசத்தில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கி, கட்சி மாறி ஓட்டு போட்டனர். இதற்கிடையே முக்கிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்., ஆட்சி ஊசலாடுகிறது.
மொத்தம், 68 உறுப்பினர்கள் உள்ள ஹிமாச்சல சட்டசபைக்கு, 2022 இறுதியில் நடந்த தேர்தலில், 40 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.,வுக்கு, 25 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மூன்று பேர் சுயேச்சைகள். பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா, இந்த மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருடைய பதவிக் காலம் முடிவடைய உள்ளது. இங்கு காங்கிரஸ் பெரும்பான்மையுடன் உள்ளதால், அவர் குஜராத்தில் இருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இங்குள்ள ஒரு ராஜ்யசபா இடத்துக்கான தேர்தலுக்கு, காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி நிறுத்தப்பட்டார். இவரது வெற்றி உறுதி என்ற நிலையில், பா.ஜ., சார்பில் ஹர்ஷ் மகாஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், இருவருக்கும், தலா 34 ஓட்டுகள் கிடைத்தன. கடைசியில், ‘டாஸ்’ போடப்பட்டு, ஹர்ஷ் மகாஜன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம், 25 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ள நிலையில், பா.ஜ., வேட்பாளருக்கு, கூடுதலாக, ஒன்பது ஓட்டுகள் கிடைத்தன. இது ஆளும் காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தங்களுடைய கட்சியின், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் கடத்தப்பட்டதாக காங்கிரஸ் முதல்வர் சுகு குற்றஞ்சாட்டினார். அக்கட்சியின் ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூன்று சுயேச்சை உறுப்பினர்கள், ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளித்தவுடன் மாயமானது, குழப்பத்தை அதிகரிக்க செய்தது. அவர்கள் ஹரியானாவின் பஞ்ச்குலாவில், சொகுசு விடுதியில் இருப்பது பிறகு தெரியவந்தது. இந்தக் குழப்பம் போதாது என்று, கட்சியின் மூத்த தலைவரும், பொதுப் பணித் துறை அமைச்சருமான விக்ரமாதித்ய சிங், நேற்று தன் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பின், முதல்வர் சுகு ராஜினாமாவை ஏற்க மறுப்பதாகவும், இது தொடர்பாக அழுத்தம் தரபோவதில்லை என்றும் அவர் குழப்பினார்.
இவர், தன்னுடன் வேறு சிலரை இழுத்து சென்றுவிடுவாரோ என்ற அச்சத்தில், காங்கிரஸ் இருந்தது. இந்த சூழ்நிலையில், பட்ஜெட்டை நிறைவேற்றுவதற்காக சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, கடத்தப்பட்டதாக கூறப்படும், ஒன்பது எம்.எல்.ஏ.,க்களும், சட்டசபைக்கு வந்தனர். அவர்களுக்கு பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் பலத்த வரவேற்பு அளித்தனர். இவர்கள் இணைந்து, பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாமல் தடுத்து விடுவாரோ என்ற அச்சம், முதல்வருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், சட்டசபை சபாநாயகரை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் உட்பட, 15 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால், சட்டசபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. பா.ஜ.,வினர் வெளிநடப்பு செய்தவுடன், பட்ஜெட் நிறைவேறியதாக அறிவிக்கப் பட்டது.
இதற்கு முன்னதாக, இந்த அரசியல் குழப்பத்துக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை, சுக்விந்தர் சிங் சுகு ராஜினாமா செய்ய முன்வந்ததாக செய்திகள் பரவின. ஆனால், அதை அவர் மறுத்தார். காங்கிரசின் ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூன்று சுயேச்சைகள் உதவியுடன், ஆட்சியைப் பிடிக்க பா.ஜ., முயற்சி செய்யும் என்ற பேச்சு பரவியது. இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது.
இந்தப் பணி, கட்சியின் ஹரியானா முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா, கர்நாடகா துணை முதல்வர் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைத்து, 14 மாதங்களே ஆன நிலையில், ராஜ்யசபாவின் ஒரு இடத்துக்கு நடந்த தேர்தலால், காங்கிரஸ் கட்சி கலகலத்துள்ளது. இந்த ஆட்சித் தொடருமா என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.