மார்ச் 8,9,10 தேதிகளில் குவாலியரில் கூடிய ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பிரதிநிதி சபை நிறைவேற்றிய தீர்மான வாசகம்:
‘‘மனிதகுலத்திற்கு மாபெரும் கொடை பாரதத்தின் குடும்ப அமைப்பு. ஹிந்து குடும்ப வழிமுறைகள், ஒரு தனி நபரை தேசத்தில் இணைந்து, அடுத்து வசுதைவ குடும்பகம் (உலகனைத்தும் ஒரே குடும்பம்) எனும் சித்தாந்தத்தை நோக்கி செல்வது தனிச்சிறப்பு. சமூக, பொருளாதார பாதுகாப்பு தருவதுடன் நமது பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முக்கியமான பாதையும் குடும்பமே. ஹிந்து சமுதாயம் என்றும் நின்று நிலைப்பதற்கு, தழைத்தோங்குவதற்கு குடும்ப கட்டமைப்பு முக்கிய காரணி. இன்றைய காலகட்டங்களில் புனிதமான குடும்ப பாரம்பரியம் சற்று தேய்ந்து வருவதாகத் தோன்றுகிறது. சுயநலமும் பொருளாசையுமே இதற்கு காரணம். பொருளாசை எண்ணத்தால் மன அழுத்தம், விவாகரத்துகள் அதிகமாகி வருகின்றன.
கூட்டு குடும்பங்கள் தனிக் குடித்தனங்களாக மாறிவருகின்றன. குழந்தைகளை சிறு வயதிலேயே விடுதியில் சேர்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு குடும்ப அரவணைப்பு இல்லாமல் போவதால் குழந்தைகள் தனிமைக்கு ஆளாகிறார்கள். இதனால் வன்முறை, போதை பழக்கங்கள், குற்றம், தற்கொலைகள் அளவில்லாமல் அதிகரித்து வருகின்றன. முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருவதும் கவலை அளிக்கிறது.
நமது குடும்பத்தின் உயிர்ப்புள்ள பண்பாடு சார்ந்த கட்டமைப்பை சிறப்பாக முன்னெடுத்து செல்ல விரிவான விவரமான முயற்சி மிக அவசியம் என அகில பாரத பிரதிநிதி சபை கருதுகிறது.
ஒழுக்கம், அறம் சார்ந்த அன்றாட வாழ்க்கை முறை மூலம் குடும்பமானது சந்தோஷமான, அனைவர்க்கும் முன் உதாரணமாக திகழும் குடும்பமாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளுக்குள் பந்தம் அதிகரிக்க வேண்டும். ஒன்றாக சாப்பிடுவது, பூஜை செய்வது, பண்டிகைகள் கொண்டாடுவது, ஒன்றாக வெளியூர் பிரயாணங்கள் மேற்கொள்வது, தாய்மொழியில் பேசுவது உள்ளிட்ட செயல்கள் மூலம் இந்த உறவானது மேம்படும். குடும்பம், சமுதாயம் இவை ஒன்றை ஒன்று நிறைவு செய்பவை. சமூகப் பொறுப்புணர்வை வளர்க்க பொது, சமய கல்வி பணிகளுக்கு நன்கொடை அளிப்பது, தேவையானவர்களுக்கு உதவுவது ஆகியவை குடும்பத்தின் இயல்பு ஆகிட வேண்டும்.
தாய் தான் நமது குடும்பத்தின் முக்கிய அங்கம். தாய்க்குலத்தை மதிப்பது வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் பழக்கம் ஆகிவிட வேண்டும். வீட்டில் உரிமையல்ல, கடமைக்கே முன்னுரிமை. தன் கடமை செய்தால் பிறர் உரிமை காக்கப்படும். எந்த ஒரு முடிவும் அனைவரின் கலந்தாலோசனைக்கு பிறகே எடுக்கப்பட வேண்டும். அனைவரின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும். காலமாற்றங்கள் காரணமாக தீண்டாமை, வரதட்சிணை, ஆடம்பர செலவுகள், மூட பழக்கங்கள் ஆகியவை நமது சமுதாயத்தில் நுழைந்துவிட்டன. நமது குடும்பத்தில் துவங்கி ஒட்டு மொத்த சமுதாயமும் இந்த தீயபழக்கங்களை விரட்ட முயற்சி எடுக்க வேண்டும் என்று அகில பாரத பிரதிநிதி சபை வலியுறுத்துகிறது.
பல மகான்கள், துறவிகள், ஆன்மீகவாதிகள், கல்வியாளர்கள், அறிஞர்கள் இந்த சமுதாயம் மேம்பட பல சேவைகள் புரிந்துள்ளார்கள். அவர்கள் இந்த சவால்கள் குறித்து சிந்தித்து, குடும்ப கட்டமைப்பை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று பிரதிநிதி சபை கேட்டுக்கொள்கிறது.
சமுதாயத்தில் இந்த மாற்றங்களை ஆக்கபூர்வ கருத்துள்ள திரைப்படங்கள் போன்ற ஊடகங்கள் மூலம் கொண்டு வர புகழ்பெற்ற பெருமக்களை பிரதிநிதி சபா கேட்டுக்கொள்கிறது. இதன் மூலம் குடும்ப கட்டமைப்பு மேம்படுவதுடன், சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும். கல்விக் கொள்கையை உருவாக்கும்போது நமது குடும்ப அமைப்பை மேம்படுத்தும் விதமாக அமைக்கவேண்டும் என்று அனைத்து அரசுகளையும் கேட்டுக்கொள்கிறோம். சூழ்நிலைகள் காரணமாக தனிக்குடும்பமாக வாழ்வோர், குடும்ப உறுப்பினர்களை அவ்வப்போது சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். மூதாதையரின் பூமியுடன் நாம் இணைந்து இருப்பது நமது குடும்பத்தின் வேரை பலப்படுத்தும். குழந்தைகளின் ஆரம்ப கல்வியானது உள்ளூரில் தான் இருக்க வேண்டும். அப்போது தான் குடும்பத்தினருடனும் சமுதாயத்துடனும் பிணைப்பு ஏற்படும். பால கோகுலம், பண்பாட்டு வகுப்புகள் போன்ற சமுதாய நிகழ்ச்சிகளை நமது பகுதியில் ஏற்பாடு செய்வதன் மூலம் பிற குடும்பங்களுடனும் இணக்கம் ஏற்படும். அன்பு, தியாகம், விட்டுக்கொடுத்தல் போன்றவையை சந்தோஷமான குடும்பத்தின் அஸ்திவாரம். இவை அனைத்தும் உள்ள குடும்பத்தில் உள்ள அனைவரும் நிச்சயம் சிறப்பான ஒரு நிலையை அடைவார்கள். நமது குடும்ப கட்டமைப்பு முறை சந்தோஷமானதாக, உயிர்ப்புள்ளதாக, உற்சாகமானதாக இருக்க, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும், சமுதாயமும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று பிரதிநிதி சபா கேட்டுக்கொள்கிறது.”