ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் அதிபதி ‘ஆண்டவன் ஸ்வாமிகள்’ என்று அனைவரும் வழிபடக்கூடிய ஜீயர் ஸ்வாமிகள் நம்மை விட்டு நீங்கியது மனித குலத்திற்கே பெரிய இழப்பு. ஸ்ரீரங்கம் ஆஸ்ரமத்தின் 11-வது மடாதிபதியாக அருள்பாலித்த மகான் நம்மை துயர்கொள்ள வைத்து வைகுண்டபதி ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்தவண்ணம் திருநாட்டிற்கு எழுந்தருளினார்.
காருண்யம், அன்பு, அரவணைப்பு, ஆசிர்வாதம், ஞாபகத் திறன், மருத்துவம் மற்றும் உடல் வலிமையில் சத்ரபதி சிவாஜியினை நினைவுபடுத்தும் வீர புருஷர், கம்பீரத்தில் பீஷ்மருக்கு நிகராக விளங்கிய மகான். கல்வியில் புலமை, வேத வித்தான இவர் பிரபந்தங்களில் உள்ள ஊற்றுப் பெருக்கினை அனைவருக்கும் பஞ்சமில்லாமல் அள்ளி வழங்கிய வள்ளல் பெருமான்.
தென்னாற்காடு மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஸ்ரீ முஷ்ணம் கிராமத்தில் பிறந்த இவர் வராஹன் என்று அழைக்கப்பட்டார். இளம் வயதில் வேதங்களையும் பிரபந்தங்களையும் பயின்ற ஸ்வாமிகள், சிறந்த பாடகராகவும் விளங்கினார். மேலும் தமிழுடன் ஆங்கிலம், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி, சம்ஸ்க்ருதம் போன்ற பல மொழிகளில் சிறந்து விளங்கியதுடன்சிற்பசாஸ்த்திரம், ஜோதிடம், அரசியல், கட்டுமானப்பணி, ஆயுர்வேதம் யோகாசனம் போன்ற கலைகளில் சிறந்து விளங்கினார். அனைவரிடமும் அன்பினை அள்ளி வழங்குவதில் அவருக்கு இணை இறைவனே என்பதாலோ அவரை ஆண்டவன் ஸ்வாமிகள் என்று அழைத்தனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் ஆசிரியராக அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் கல்வி வழங்கினார். ஆந்திர மாநிலத்தில் சம்ஸ்க்ருதம் ஆசிரியராகவும் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் தர்க்க சாஸ்திரம் கற்றதுடன், தமிழ் வித்வான் என்ற பட்டம் பெற்று அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர்.
இவர் ஸ்ரீரங்கத்தில் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் ஜீயராக பொறுப்பேற்று ஸ்ரீரங்கராமானுஜ மகா தேசிகன் என்ற பெயருடன் திருமடத்தின் பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டு, பல வேத பிரபந்த பாடசாலைகளை நிறுவியதுடன், ஏழை மாணவ மாணவியர்களுக்கு குறைந்த கட்டணத்துடன் கூடிய உணவு மற்றும் தங்கும் இடம் இலவசமாக தரும் கலை இலக்கிய கல்லூரியினையும் நிறுவினார்.
தமிழில் அர்ச்சனை செதாலும் ஆண்டவனின் அருள் பெறலாம் என்று உறுதிபடக்கூறிய ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆண்டவன், ஆஸ்ரமத்தில் ஸ்ரீ பாலாஜி மந்திர் ஆலயத்தினை நிர்மாணித்தவர்.
நம் இதயத்தில் என்றும் கொலுவீற்றிருக்கும் மகான் நம்மை விட்டு நீங்கினாலும் 1,000 வருடத்திற்கு முன் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார் ஸ்ரீராமானுஜர் பரமபதம் எழுந்தருளிய காட்சியினை நினைவுப்படுத்தும் வண்ணம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அனைவரும் கண்ணீர் பெருகிட ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் தனது பிருந்தாவன ப்ரவேசத்துக்கு முன், பிரம்ம ரதத்தில் வீற்றிருக்க, வேத ப்ரபந்தங்கள் முழங்கிட, ஆயிரக்கணக்கானோர் வீதியில் உடன் வர, ஸ்ரீரங்கம் உத்தர கொள்ளிடக்கரை அருகே உள்ள திருக்குடந்தை ஆண்டவன் ஸ்வாமிகள் பிருந்தாவனத்துக்கு அருகே பிருந்தாவன பிரவேசம் செதார்.
பிருந்தாவன பிரவேசத்தின் சமயம் அனைத்து வேத விற்பன்னர்கள் வேதகோஷம் முழங்கினர். அகோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள், மன்னார்குடி செண்டாலங்கார ஜீயர் ஸ்வாமிகள் உடனிருந்தார்கள். இவரின் பூர்வாசிரம குமாரர்கள் அனைவரும் வைணவ தர்ம பரிபாலனத்திற்காக ஆண்டவன் சுவாமிகளின் விருப்பதை நிறைவேற்றினர். மைந்தர்கள் தமக்குரிய கைங்கர்யத்தினை செவ்வனே நிறைவேற்றியதை கண்ட அனைவரும் கண்ணீர் பெருக்கினர். பாரத நாட்டின் பல்வேறு துறை சார்ந்தவர்கள் தேசப்பணியில் அரசியல் பணி ஆற்றும் ஆன்மீக பெரியவர்கள் வந்து மரியாதை செத காட்சி, பாரதம் என்றுமே தரணிக்கு வழிகாட்டிதான் என்பது ஆவணப்படுத்தப்பட்டது.
ஆன்மீக பணியுடன் அன்பினையும் அள்ளி வழங்கிய ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் அட்சதையினை அருளாசியுடன் அள்ளி வழங்கிய ஆண் சிங்கம். ஏழைகளுக்கும் எளியோர்களுக்கும் வாத்சல்யத்துடன் ஆசி வழங்கிய சமுதாய சேவையில் தன்னிகர் இல்லா தலைமகன். வேதங்களும் பிரபந்தங்களும் அந்நிய நாடுகளில் வாழும் பாரதியர்களும் அறியும் வண்ணம் அங்கும் நம் சநாதன தர்மம் தழைத்தோங்கிட, அறம் வளர்க்க மடங்கள் ஸ்தாபிதம் செதார். எழுதிட வார்த்தைகள் வந்தவண்ணம் இருக்கும். நினைத்திட நினைத்திட எண்ணம் கனிந்திருக்கும். பாரத நாட்டினரையும் உலகோரையும் ஒருங்கிணைத்த மகான் அவர் பதம் வணங்குவோம்!