அயோத்தியிலிருந்து வந்தது ஜாம்பவான்

கோடை தலைவாசலில் வந்து நின்ற வேளை. மார்ச் 20ந் தேதி திமுக, திக அடங்லாக 40 குழுக்கள் போட்ட கூப்பாட்டால், ‘ராம ராஜ்ய ரத’ வருகையின் பரபரப்பு பொதுவெளியில் நூறு கோடையிடிகளுக்கு சமமாக முழங்கி ஊடகங்களையும் வேறு பக்கம் போகாமல் கட்டிப் போட்டது! விளைவு, நாத்திக, பிரிவினைவாத, சதிகார, தேசத்துரோக குழுக்களின் கூச்சல் தாங்காமல் குமுறிக் கொண்டிருந்த தமிழ் ஹிந்து வீதிக்கு வந்தார். வந்தது ரதம் அல்ல. அனுமனுக்கு அவனது அபார ஆற்றலை ஞாபகப்படுத்திய ‘ஜாம்பவான்’ என்று சொன்னால் எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.

அயோத்தியிலிருந்து உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கேரளா வழியாக தமிழ்நாட்டை வந்தடைந்த ராம ராஜ்ய பிரச்சார யாத்ரா தமிழக அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்ததோ என்னவோ, ஆளாளுக்கு ஆவேசக் கூச்சல்கள். தடுத்து நிறுத்துவோம், அனுமதியோம், இது பெரியார் மண், அண்ணா மண் என்றெல்லாம் புலம்பல் வேறு. இவை எல்லாவற்றையும் தூக்கி கடாசிவிட்டு பாமர ஹிந்து தன்னெழுச்சியாக ஆர்ப்பரித்து அலைகடலென திரண்டு வரவேற்றது நமக்கே ஒரு இன்ப அதிர்ச்சிதான்.

பிரதான எதிர்க்கட்சி தொடங்கி உள்ளூர் லெட்டர் பேடு அமைப்பு வரை ஓரணியில் திரண்டிருந்தனர். இவர்களின்  கூச்சலுக்கு எதிராக அமைதியாக தன்னார்வத்துடன் ரதத்தை வரவேற்க  கையில் காவிக் கொடியுடன்  இரு சக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டிருந்த காட்சி நமக்கும் புது அனுபவம். ராமன் இருக்குமிடம்தான் அயோத்தி என்பார்கள்.

ஆனால் இன்று தமிழகத்தில் ராம ரதம் சென்ற இடமெல்லாம் அயோத்தியாகவே காட்சி அளித்தது. இப்படி செங்கோட்டை தொடங்கி, தென்காசி, சிவகிரி, கடையநல்லூர், ராஜபாளையம், விருதுநகர், மதுரை, பரமகுடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் என சென்ற இடமெல்லாம் சிறப்பு செய்த ராம பக்தர்களின் பக்தியை வர்ணிக்க இயலாது.

செங்கோட்டை அருகில் கட்டளை குடியிருப்பு என்ற ஊரில் அருகில் பிரதான சாலையில் ஏராளமான பெண்கள் நின்றுகொண்டு யாத்திரையில் சென்ற அனைவருக்கும் தண்ணீர் வழங்கிக் கொண்டிருந்த காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களிடம் சென்று கேட்டபோது, எங்கள் ஊர் வழியாகச் செல்லும் இந்த யாத்திரை நபர்களுக்கு நாங்களும் ஏதாவது செய்யவேண்டாமா? அதனால் தண்ணீர் விநியோகம் செய்கிறோம்” என்றனர். இந்த மக்கள் வசிக்கும் ஊருக்கும் பிரதான சாலைக்கும் இடையே அரை கிமீ தூரமாவது இருக்கும்.

சிவகிரி, வாசுதேவ நல்லூர் தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் வாழும் பகுதியில் யாத்திரை சென்றபோது மதியம் 2 மணி. நல்ல பசி வேறு. யாத்திரையின் திட்டப்படி மதிய உணவுக்கு அடுத்த ஊருக்கு சென்றிருக்கவேண்டும். பசியோடு இருப்பதை பார்த்த மக்கள் அடுத்த அரை மணி நேரத்தில் அவரவர் வீடுகளிலிருந்து புளியோதரை, தயிர்சாதம் என  உணவளித்தனர் என்கிறார் ஹிந்து முன்னணி மாநில பொதுக் குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான குற்றாலநாதன்.

அதிக அளவு இளைஞர்களை இக்கூட்டத்தில் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு மோட்டார் சைக்கிளிலும் கையில் காவிக்கொடியோடு 1,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரதத்தை முன்னும் பின்னும் தொடர்ந்தனர். ரதம் 6 கிமீ தூரத்தை கடப்பதற்கு 4 மணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொண்டது. தென்காசிக்கு முன்பாக போலீஸார் ரதத்தை பின்தொடர்ந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்திவிட்ட பின்னரும் தென்காசியில்  5,000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்து ரதத்தை வரவேற்றனர்.

ரதத்தை வரவேற்க சென்ற பல்வேறு ஊர்களில் ஆங்காங்கே மசூதிகளுக்கு முன்பாக 20,30 பேர் திரண்டிருந்து  ஆர்.எஸ்.எஸ், ஹிந்து முன்னணிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபோதும், அமைதியாக கட்டுக்கோப்புடன் அணிவகுத்தது இந்த இளைஞர் கூட்டம்.

ஆலங்குளத்திலிருந்து வந்த ஒருவரை தென்காசியில் நாம் சந்தித்தபோது, இந்த யாத்திரை குறித்து எப்படி தெரியும், ஏன் இவ்வளவு தூரம் வந்தீர்கள்?” என கேட்டபோது, ராமனின் யாத்திரை தமிழகத்தை வந்தடைந்தது என்ற செய்தி டிவியில் பார்த்தவுடனேயே எனது உடலெல்லாம் புல்லரித்து விட்டது. ஒரு யாத்திரையை தடுக்க எவ்வளவு கட்சிகள் எதிர்க்கிறது என்பதை புரிந்துகொண்டு, இந்த வேளையில் நாம் ஆதரிக்காவிட்டால் பின்னர் ஒவ்வொன்றிற்கும் அவர்களிடம் அனுமதி கேட்கக்கூடிய நிலை வந்துவிடும். எனவே கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தேன் என்று பதிலளித்தார்.

யாத்திரைக்கு முதல் நாள் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து அனைத்து எதிராளிகளும் வாய்மூடி மௌனித்துவிட்டனர். ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்த போலீஸார் கூட கூடிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டுதான் போனார்கள்.

ரதம் சென்ற ஒவ்வொரு பகுதியிலும் ஆர்ப்பரித்து திரண்ட ஹிந்துக்களின் ஆவேச எழுச்சி இனி ஒருமுறை  இதுமாதிரியான மடத்தனத்தை செய்யக்கூடாது என எதிர்த்தரப்பினருக்கு புரிய வைத்திருக்கும். எங்கோ ஒரு மூளையில் அமைதியாக யாருக்கும் தெரியாமல் நடைபெற்றிருக்க வேண்டிய யாத்திரையை அனைத்து ஹிந்துக்களுக்கும் செய்தி சொல்லி உணர்வுபூர்வமாக கலந்துகொள்ளச் செய்த ஸ்டாலின், சீமான், திருமா, வைகோ உள்ளிட்ட அனைத்து ஹிந்து விரோத கும்பல்களுக்கும் நாம் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

தலைப்பில் சொல்லப்பட்டது போல ராமாயணத்தில் ஜாம்பவான் எப்படி அனுமனுக்கு தனது சக்தியை உணர்த்தினாரோ, அதுபோன்று தமிழக ஹிந்துக்களுக்கு மக்கள் சக்தியை உணர்த்தி, உத்வேகத்துடன் செயல்பட  நல்லதொரு வாய்ப்பை வழங்கிச் சென்றிருக்கிறது ராம ராஜ்ய யாத்திரை.

தமிழகம் ஆன்மிக பூமியாக, ஆண்டாளின் பூமியாக, ராம ராஜ்ய பூமியாக மாறப்போவதை யாராலும் தடுக்கவும் முடியாது என்பதை நமக்கும் உணர்த்தியது இந்த யாத்திரை.