ஸ்ரவண மாதம் என்பதால் இந்துக்களின் கோரிக்கையை ஏற்று பிஹாரில் பக்ரீத் குர்பானியை ரத்து செய்த முஸ்லிம்கள்

ஸ்வரண மாதம் என்பதால் பிஹாரின் முசாபர்பூர் சிவன் கோயிலை சுற்றி வாழும் இந்துக்கள் ஒரு கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற அப்பகுதி முஸ்லிம்கள் இன்று பக்ரீத்திற்கானக் குர்பானியை(விலங்குகள் பலி) ரத்து செய்தனர்.

பிஹாரின் முசாபர்பூர் நகரின் சஹதா பஜார், படி மஸ்ஜீத் பகுதியில் அமைந்துள்ள கரீப்நாத் எனும் சிவன் கோயில். இது, இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து வாழும் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.

இன்று, வடமாநில இந்துக்களின் வருடப்படி சிவனுக்கானதான ஸ்ரவண மாதத்தின் நான்காவது திங்கள் கிழமை. அதேசமயம், முஸ்லிம்களின் தியாகத்திருநாளான பக்ரீத் பண்டிகையும் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்கூட்டியே கணக்கிட்ட முசாபர் நகரப் பகுதி இந்துக்கள், தம் சகப்பகுதிவாசிகளான முஸ்லிம்களிடம் ஒரு கோரிக்கை வைத்தனர். அதில் இன்று பக்ரீத் எனபதால் ஆடு, எருமை, ஒட்டகம் பலி கொடுத்தால் அது இந்துக்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும் எனத் தெரிவித்தனர்.

இந்த கோரிக்கை சஹதா பஜார், படி பஸ்ஜீத் பகுதியின் மாநகராட்சி உறுப்பினரான கலமேஷ்வர் பிரசாத் மூலமாக வைக்கப்பட்டது. இதை மகிழ்வுடன் ஏற்ற அப்பகுதி முஸ்லிம்கள் இந்த வருடம் தாம் பக்ரீத்திற்கான குர்பானியை அளிக்கப்போவதில்லை என முடிவு செய்தனர். இதை மனதியில் வைத்து நேற்று முன்தினம் வந்த வெள்ளிக்கிழமை மதிய தொழுகையின் போது மசூதிகளில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை அப்பகுதி முஸ்லிம்களும் ஏற்று அதன்படி நடந்திருப்பது பலராலும் பாராட்டப்படுகிறது.

பிஹாரின் முக்கியமான சிவன் கோயிலான கரீப்நாத்தில் இன்று ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்துள்ளார்கள். பிஹார் முழுவதும் மற்றும் அருகிலுள்ள நாடான நேபாலில் இருந்தும் பக்தர்கள் திரளாக வருவது வழக்கம்.

அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்ட அப்பகுதிவாழ் முஸ்லிம்கள் இந்த முடிவை பக்ரீத் நாள் அன்றுஎடுத்துள்ளனர். இதற்கு பிஹாரில் நிலவும் மதநல்லிணக்கம் காரணம் ஆகும்.