இந்தியா இதழைத் தொடங்கி நடத்திய மண்டயம் சீனிவாசச்சாரியார் சுதேசிக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். அவர் பாரதியாரிடம் தங்களது வீட்டில் சுதேசிச் சாமான்கள் மற்றும் கைத்தறி ஆடைகளை இயன்ற வரை பயன்படுத்திவருவதாகப் பெருமை அடித்துக்கொண்டிருப்பார். ஒருநாள் சீனிவாசச்சாரியார் வீட்டுக்கு வருகை தந்த பாரதியார், “நீங்கள் என்னுடன் வாருங்கள்… ஒரு புதுமையான ஆளுமையை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நீர் சுதேசி சுதேசி என்று பெருமை அடித்துக்கொள்கிறீரே! நம்மையெல்லாம் மீறிய சுதேசியவாதி அவர்” என்று கூறி, அவரை திருவல்லிக்கேணி சுங்குராம் செட்டித் தெருவில் வசித்த வ.உ.சி.யின் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அங்கு வ.உ.சி. வீட்டின் முன் அறையில் பாய் மீது உட்கார்ந்திருந்தார். அவர் எதிரே மேசை மீது உள்ளூரில் தயாரித்த கரடுமுரடான காகிதம், உள்நாட்டு மைக்கூடு, வாத்து இறகு எழுதுகோல் இதைக் கண்டதுமே அவரைக் காணச் சென்றவர்களெல்லாம் சிரித்துவிட்டனர். வ.உ.சி. அவர்களை வரவேற்று அமரச்செய்தார். வீட்டில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரம் முதல் அனைத்துச் சாமான்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன. எந்த ஐரோப்பிய வாசனையும் இல்லாத வீடாக அது காட்சி அளித்தது.
பாரதியார், “நாம் சுதேசிகள் என்று சொல்லிக்கொள்வதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சளவில்தான். நம்மிடம் இன்னும் தவிர்க்க முடியாதபடி எவ்வளவோ ஆங்கிலச் சாமான்கள் இருக்கின்றன. அவற்றை நாம் விட்டெறிய முடிவதில்லை. வ.உ.சி.யைப் பாருங்கள். எல்லாச் சாமான்களையும் விட்டெறிந்து குறைவின்றி வாழ்ந்து வருகிறார்” என்றார். நம் நாட்டுச் சாமான்களை உபயோகப்படுத்தினால்தான் நாம் உயர முடியும். வ.உ.சி. வெறுமனே வாய்ப் பேச்சு வீரராக மட்டுமல்லாமல், செயலில் வாழ்ந்துகாட்டிய முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தமிழகத்தில் வ.உ.சி.க்கு முன்பாக ஏகாதிபத்திய எதிர்ப்பு பலப் பல வடிவங்களில் நிகழ்ந்திருந்தாலும் ஆங்கிலேயர்களை பல கோணங்களிலும் திக்குமுக்காடச் செய்த தனித்துவம் மிக்கவர். வெள்ளையர் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மும்முனைப் போர் நடத்தியவர்.
ஆங்கிலேய முதலாளிகளை எதிர்த்து கோரல் மில் போராட்டத்தை நடத்தி, முதன்முதலாக எளிய பாட்டாளி வர்க்கத்தைக் கவர்ந்தார். ஆங்கிலேய அதிகாரிகளை எதிர்த்து தேசாபிமானி சங்கம் கொண்டுவந்தார். இதன் மூலம் தர்ம சங்க நெசவுசாலை, சுதேச பண்டக சாலை நிறுவி, உள்நாட்டுப் பொருட்களை வாங்கவும் விற்கவும் ஏற்பாடுசெய்தார். ஆங்கிலேய வணிகர்களை எதிர்க்கும் வண்ணம், சுதேசி நாவாய் சங்கம் கண்டு ஆங்கிலேயர்களை மிரட்டியதோடு மட்டுமல்லாமல், தனது முழு வாழ்வையும் துன்பத்துக்கு ஆளாக்கிக்கொண்டவர். வெள்ளையர்களின் நிர்வாகத்தை எல்லா வழிகளிலும் செயலற்றதாக்கினார். மிரண்ட ஆங்கிலேயர்கள், வ.உ.சி.யை ஒடுக்குவதற்கு நாடு கடத்தப்பட்ட தண்டனை அளிக்க முன்வந்தாலும் வ.உ.சி.யை நினைத்தாலே ஆங்கிலேயர் கலங்கும் அளவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.
வ.உ.சி. சிறையில் இருக்கும்போதே ஆங்கிலேய நிர்வாகம் சுதேசிக் கப்பல் கம்பெனியை ஒழிக்கப் பல வழிகளில் சதித் திட்டம் தீட்டி வெற்றியும் கண்டது. சுதேசிக் கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களே நட்டம் குறித்து வ.உ.சி.க்கு நோட்டீசு அனுப்பினர். சிறையில் இருந்த வ.உ.சி. பங்குதாரர்களுக்கு வரும் லாபத்திலும் நட்டத்திலும் சமபங்கு உண்டு என்பதை வலியுறுத்தி சிறையில் இருந்தே நட்டத்தை ஈடுசெய்வதாகக் கூறினார். இறுதியாக, எந்த ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல் விடப்பட்டதோ அந்த ஆங்கிலேய கம்பெனியிடமே கப்பலை விற்றுவிட்டார்கள் பங்குதாரர்கள். அச்சமயம், வ.உ.சி. சுதேசி நாவாய் புலம்பல் என்ற மனதைக் கசக்கிப் பிழியும் வெண்பா பாடல் ஒன்றை எழுதினார்:
என் மனமும், என்னுடம்பும், என் சுகமும் என்னறமும்/ என் மனையும் என் மகவும் என் பொருளும் – என் மணமுங்/குன்றிடினும் யான் குன்றேன் கூற்றுவனே வந்திடினும்/வென்றிடுவேன் காலால் மிதித்து. பாரதியார், “சிதம்பரம், மானம் பெரிது! மானம் பெரிது! ஒரு சில ஓட்டைக் காசுகளுக்காக எதிரியிடமே கப்பலை விற்று விட்டார்களே. அதைவிட கப்பலைச் சுக்குச் சுக்கலாக நொறுக்கி வங்காள குடாக் கடலில் மிதக்க விட்டாலாவது எனது மனம் ஆறியிருக்குமே” என்று கடுஞ்சினத்துடன் வ.உ.சி.யிடம் முறையிட்டார். வ.உ.சி.யினுடைய சுதேசிப் பிடிப்பு எந்த அளவுக்கு உயர்ந்தது என்றால், சிறையில் இருந்தபோது, ஜேம்ஸ் ஆலனின் ‘அஸ் அ மேன் ஆஃப் திங்த்’ நூலை ‘மனம் போல் வாழ்வு’ என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதில், ‘இந்தப் புத்தகத்தின் காகிதம், அச்சு, மை, கட்டடம் அனைத்தும் சுதேசியம்’ என்ற குறிப்புடன் வெளிவரச் செய்து பதிப்பித்தார்.
வ.உ.சி – நினைவு தினம் நவம்பர் 18