வங்காளத்தில் விபின் சந்திரபால், பஞ்சாப்பில் லாலா லஜ்பதி ராய், மராட்டியத்தில் பாலகங்காதர திலகர் போன்றோர் பாரத விடுதலைக்கு தீரமாக போராடியபோது அவர்களை போலவே தமிழகத்தில் தேச விடுதலைக்கு பாடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
வழக்கறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சுதந்திர போராட்ட வீரர், தொழிற்சங்கத் தலைவர், தொழிலதிபர் என பல தளங்களில் தேசத்திற்காக போராடிய மாபெரும் தலைவர் வ.உ.சி. இவரின் போராட்ட உணர்ச்சி காரணமாக இவரை ‘வந்தேமாதரம் பிள்ளை’ என அழைப்பதும் உண்டு.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை தேசத்திற்கு அறிமுகம் செய்தவர் இவர். ஆங்கிலேய ஏகபோக கப்பல் போக்குவரத்திற்கு முடிவுகட்ட எண்ணி சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
எஸ்.எஸ் காலிலியோ, எஸ்.எஸ் லாவோ என இரண்டு கப்பல்களை சுதேசி தலைவர்களான பாலகங்காதர திலகர், அரவிந்தர் ஆகியோரின் துணையுடன் வாங்கினார்.
‘வ.உ.சி. சிதம்பரம் பிள்ளையின் சொற்பொழிவையும், பாரதியின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் கூட உயிர் பெற்று எழும், புரட்சி ஓங்கும்’ என கூறி வ.உ.சிக்கு கடுமையான தண்டனை வழங்கினார் நீதிபதி பின்ஹே.
பல தலைவர்கள் ஆடம்பர வீடு, அரண்மனைகளில் சொகுசாக தங்கள் சிறை தண்டனையை அனுபவித்த காலத்தில் செக்கிழுப்பு, சணல் நூற்பு, கல் உடைப்பு என தேசத்திற்காக உண்மையாகவே பாடுபட்ட தலைவர்களில் வ.உ.சியும் ஒருவர்.
வ.உ.சியின் நினைவு தினம் இன்று.