“தமிழ் கடவுளை வழிபட தமிழ் ஹிந்து சமுதாயம், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தானாகவே தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்படுகிறது” என்று சொல்லி திருப்பரங்குன்ற நிலவரம் பற்றிய சென்ற வார தலையங்கத்தை முடித்திருந்தோம். ஆம், வலுப்படுகிறது.
திருப்பரங்குன்றத்தில் மலையுச்சி தீபத் தூணில், இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்றும் ஹிந்து சமய சடங்கிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தும், காவல்துறை ஹிந்துக்களைத் தடுத்து நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு டிசம்பர் 12 அன்று விசாரணை தொடங்கியது.
அனுமதி அளித்த நீதிபதியை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர ஊரைக் கூட்டிப் பார்த்தது நாத்திக திமுக அரசு. வன்மம் நிறைந்த இந்த முயற்சி என்ன கதியாகும் என்பது தெளிவு.
தமிழக ஹிந்துவின் மனநிலையை பாரதியாரின் பின்வரும் வரிகள் அப்படியே பிரதிபலிக்கின்றன:
“தடுத்து நிற்பது தெய்வத மேனும் சாகு மானுட மாயினும் அஃதைப் படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி, பாரில் வெற்றி எனக்குறு மாறே”. ஒருங்கிணைந்த ஹிந்து சமுதாய சக்தி தான் இன்று ‘காளி’.
சென்ற வாரம் திருச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு நிகழ்ச்சியில், ஆர். எஸ். எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத், “திருப்பரங்குன்ற பிரச்சினையை பெரிதாக்கலாமே?” என்று சங்க ஆதரவாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ஹிந்து சமுதாயத்திற்கு வழிகாட்டும் விதத்தில் பின்வருமாறு கூறினார்:
“வழக்கு நடந்து வருகிறது; திருப்பரங்குன்ற பிரச்சினையை பெரிதாக்க வேண்டியதில்லை; தமிழகத்திலும் ஹிந்து அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன; இதில் ஹிந்துவுக்கே வெற்றி கிடைத்தாக வேண்டும்; பெரிதாக்க வேண்டிய சூழ்நிலை என்றால் அப்போது பார்த்துக் கொள்வோம்”.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக காவல்துறையினர் தண்டனை பெறாமல் தடுக்க, ‘மாநில அரசு அனுமதியோடுதான் அரசு ஊழியர் எவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்ற சட்டத்தை காவல்துறையினருக்கும் விஸ்தரித்து பிரச்சினையை பெரிதாக்கியது திமுகவினர் தான்.
தமிழக ஹிந்துக்களின் நியாயமான தரப்பை நாடாளுமன்ற அவையில் முன்வைக்க முயன்ற மத்திய அமைச்சர்களின் குரலை ஒடுக்கும் விதத்தில் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தியதும் திமுகவினர் தான்.
நீதிமன்ற பெஞ்ச் ஏற்றுக்கொண்ட தீர்ப்பை அளித்ததற்காக நீதிமன்றத்தை முடக்க முயன்று, முடியாமல் போனதால் ஹிந்துக்களின் அரசியல் சாஸன உரிமையை உயர்த்திப் பிடித்த நீதிபதியை நீக்க அசட்டுத்தனமாக ஆசைப்படுவதும் திமுகவினர் தான். எதிர்வரும் தேர்தலில் தங்களுக்கு தோல்விதான் என்ற உதறலே இதற்கெல்லாம் காரணம்.