வெண்டைக்கு விலை இல்லை

கம்பத்தில், அதிகம் விளைந்த வெண்டைக் காய்களுக்கு  உரிய விலை கிடைக்க இல்லை என்பதால் விவசாயிகள் அவற்றை ஆற்றில் கொட்டியுள்ளனர். அதிக உற்பத்தி, உரிய விலை இல்லை போன்ற காரணங்களினால் காய்கறிகள், பால் பொருட்கள் சில நேரங்களில் பாழாகிறது. இந்த செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். கடந்து சென்று விடுகிறோம். ஆனால் விலை ஏறினால் போராடுகிறோம். விவசாயிகளை பொறுத்தவரை இது வாழ்வா சாவா போராட்டம். விவசாயிகளின் நியாயமான பிரச்சனைகளை அரசும் மக்களும் புரிந்து கொள்ளாமல் இருப்பது விவசாயிகளை பழிப்பதற்கு சமம். விவசாயிகளும் பொருட்களை தெருவில் கொட்டி எதிர்ப்பை காண்பிப்பது என்பது நம்மை வாழ்விக்கும் இயற்கை அன்னையை பழிப்பதற்கு சமம்.

இதற்கு நிரந்தர தீர்வு காண அரசும் விவசாயிகளும் இணைந்து முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, அரசு விவசாய பொருட்கள் சேமிப்புக்கு தேவையான அளவு குளிர்பதன கிடங்குகள் அமைக்கலாம். நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக பெற்று மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் விற்பனை செய்யலாம். தேவைக்கேற்ப விவசாயம், ஒருங்கிணைந்த விவசாயம், மதிப்பு கூட்டல் போன்றவற்றை விவசாயிகள் முயற்சிக்க ஊக்குவிக்கலாம். விவசாயிகளும், விவசாய பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக தயாரிப்பது. நேரடி விற்பனை, கூட்டுறவு விற்பனை. கூட்டுறவு விவசாயம். தொழில்நுட்ப பயன்பாடு, புதிய சந்தை வாய்ப்புகள் போன்ற முயற்சிகளை முன்னெடுத்து வாழ்வில் வளம் காண வேண்டும்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் இதை போன்ற முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. எனவே இது குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் பெற வேண்டும்.