உலகெங்கிலும் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்திகள் குவிந்தன. உலகம் முழுவதும் அவருக்கு இருக்கும் மதிப்பு, மரியாதையின் அடையாளம் இது.
உலக தலைவராக அவர் உயர்ந்துள்ளதன் அடையாளம் மட்டுமல்ல இது. நமது தேசத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது என்பதையும் இது காட்டுகிறது. சுதந்திரம் அடைந்த பிறகு கொஞ்ச காலம் ஜவஹர்லால் நேருவுக்கு கூட இது போன்ற உலக அந்தஸ்து இருந்தது. நேரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். காந்தி மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் வாரிசாக அடையாளப்படுத்தப்பட்டார். அதனால் அவர் சுதந்திரத்திற்கு பிறகு உலக அரங்கில் உயர்த்தப்பட்டார். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. உள்நாட்டிலும், உலக அரங்கிலும் பாரதம் திக்கித் திணறியது.
தனக்கு முன்பிருந்தவர்களை போலல்லாமல் மோடி எளிய பின்னணி கொண்டவர். அது மட்டுமன்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருத்தியலின் நிழலும் அவர் மீது கவிழ்ந்திருந்தது. 2014 பிரதமரானபோது எதிர்க்கட்சிகள் பலவும் அவர் அயலுறவு கொள்கையில் தோற்றுப் போவார் என்று கணித்தன. ஆனால் யாரும் நினைத்துப் பார்க்க முடியாததை அவர் சாதித்தார்.
பல ஆதிக்க மையங்களை கொண்ட உலகில் தற்சார்பு கொண்ட நிலையை மேற்கொள்வது சுலபமான விஷயமல்ல. 1960களில் பிரான்ஸ் நாட்டில், பத்தாண்டுகளுக்கும் மேலாக சார்லஸ் டி கோல் அதிபராக இருந்தபோது இது போன்றதொரு கொள்கையை பின்பற்றினார். இரு துருவங்கள் இடையே பனிப்போர் நிகழ்ந்த காலம் அது. ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பொதுவாக அமெரிக்க சார்பு நிலையை மேற்கொண்டிருந்தன. அப்போது, டி கோல் தற்சார்பு கொண்ட அயலுறவு கொள்கையை தீவிரமாக முன்னெடுத்தார்.
அவரது அயலுறவு கொள்கை அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துப்போக மறுத்தது. சோவியத் யூனியனின் அதிபர் நிகிதா குருசேவ் மற்றும் சீனாவின் மா சேதுங் உடன் அவருக்கு இருந்த உறவை அமெரிக்கா பரிவுடன் பார்க்கவில்லை. ஜான் கென்னடி மற்றும் லின்டன் ஜான்சனின் ஆட்சியின்போது ராஜதந்திர ரீதியாக தனிமைப் படுத்துவோம், பொருளாதார தடைகள் விதிப்போம், நேட்டோ ராணுவ பாதுகாப்பு வளையத்தை விலக்கிக் கொள்வோம் என்றெல்லாம் அவரை அச்சுறுத்தினார்கள்.
கடைசியில் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் அவரது ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கர் தான் டி கோலின் சுதந்திரமான போக்கு அமெரிக்காவுக்கு எதிரானது அல்ல என்றும் அது தன் நாட்டின் (பிரான்சின்) சுதந்திரத்தையும் தற்சார்பையும் முன்னிறுத்தும் முயற்சி என்பதை புரிந்து கொண்டார்கள்.
பக்குவமாக மோடி மேற்கொண்ட தற்சார்பை மையமாகக் கொண்ட சுதந்திரமான வெளியுறவு கொள்கையால் உலக அரசியல் களத்தில் பாரதம் உயர்ந்தது. அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள சிலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது இயல்பானதே. 1960ல் டி கோலை மிரட்டியதை போலவே இப்போதுள்ள அமெரிக்க தலைமை மோடியை பல்வேறு வழிகளில் முறைக்கிறது. டி கோல் போலவே மோடியும் உள்நாட்டில் கடுமையாக விமர்சிக்கப்படுவார். வெளிநாட்டு சதிகள் அரங்கேறும். இருந்தாலும் மோடி விவேகத்துடன் கூடிய, தற்சார்பு கொண்ட, சுதந்திரமான புதிய அயலுறவு கொள்கையை உருவாக்கி விட்டார் என்பதுதான் உண்மை.
மோடி, குஜராத் முதல்வரான பிறகு சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் உட்பட பல நாடுகளுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக பயணம் செய்தார். நவீன குஜராத் பற்றிய அவரது கனவை நினைவாக்க மேற்கத்திய நாடுகளின் ஆதரவு தேவை என்பதை அறிந்திருந்தார். முக்கியமாக அந்த நாடுகளில் வாழும் பாரதியர்களின் ஆதரவு அவசியம் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.
குஜராத் பொருளாதாரத்திலும், வணிகத்திலும் வெற்றிகரமான இடத்தை பிடித்ததால் மேற்கத்திய நாடுகள் அதை கவனத்துடன் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டில்லியில் இருந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தூதுவர்கள் தங்கள் நாட்டு மேலிடத்திற்கு மோடியுடன் உறவு வேண்டாம் என சொல்லியது எடுபடாமல் போனது. எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, 2005ல் ஏற்றமிகு குஜராத் சம்மேளனத்திற்கு பிரிட்டனின் தொழிற் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பேரி கார்டினெர் கலந்து கொண்டார்.
2008ல் அமெரிக்காவின் துணை தூதர் என்னுடன் பேசும்போது சாதாரணமான குரலில் , மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என்று கேட்டார். வாஷிங்டனில் (அமெரிக்காவில்) இது முக்கிய விஷயமாக இருக்கிறது என்பதை உணராத நான், ‘பிரதமர் வேட்பாளராக நிற்பாரா என்பதல்ல எப்போது என்பதுதான் சரியான கேள்வி’, என்று என் பதிலின் முக்கியத்துவத்தை உணராமலே சொன்னேன்..
2009 அக்டோபரில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மோகன் பாகவத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலுக்கு முயற்சித்தோம். மிக முக்கிய நாட்டின் தூதுவர், ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற உத்தரவாதத்துடன், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸூடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்ற தடையுத்தரவு இருந்த போதிலும், 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரே ஒருவரை தவிர மற்ற எல்லோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில் கேட்கப்பட்ட கேள்விகள் பலவும் மோடியைப் பற்றி தான் இருந்தன. குஜராத் கலவரத்துடன் மோடியை தொடர்புப்படுத்தி மற்ற கட்சிகள் குற்றம் சாட்டுவதை மோகன் பாகவத் வன்மையாக மறுத்தார். நாட்டில் மிகவும் மதிக்கக் கூடிய தலைவராக மோடி இருக்கிறார் என்று உறுதிபட சொன்னார்.
2011ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய நாட்டின் தூதர் தடையாணையை மீறி காந்தி நகருக்கு வந்து மோடியை சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பிறகு எல்லா விதமான தடைகளும் தகர்ந்தன. 2014 இல் மோடி பிரதமரானபோது உலக நாடுகளின் அயலுறவுத்துறை அதிகாரிகளின் வட்டத்தில் ஒரு மதிப்பும், மரியாதையும் உருவாகிவிட்டது.
1945இல் அரசியல் ரீதியான அணுகுமுறைக்கு (ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு) பதிலாக அணுகுண்டை பயன்படுத்தியது ஏன் என்று கேட்டதற்கு, ‘அறிவியலை விட அது மிகவும் சிக்கலானது என்பதால்’ என்று ஐன்ஸ்டீன் கூறியது புகழ்பெற்ற வாக்கியமாயிற்று. புதிய பாரதம் ராஜதந்திர நடவடிக்கைகளையும், இராணுவ நடவடிக்கைகளையும் சமமாக கையாளும் திறன் படைத்தது என்பதை மோடி வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்