கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) சர்வதேச பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றில் வெற்றிபெற்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்று உலக சாம்பியன் ஆனார். ஒட்டுமொத்த தேசமும் அவரைக் கொண்டாடியது.
ஆனால், அதே நாளில் விளையாட்டுத் துறையில் இந்தியா சார்பில் ஒரு சாதனையை சத்தமே இல்லாமல் சர்வதேச அளவில் நிகழ்த்திக் காட்டிய மற்றொரு இளம் இந்திய வீராங்கனையையும் நாம் கொண்டாட தவறி விடக் கூடாது.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச ஜூனியர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் (தஉஇமதயஉ இஅஈஉப பிரிவில்) தங்கம் வென்று சாதனை படைத்தார் இந்தியாவின் 17 வயது இளம் வீராங்கனை கோமாலிகா பாரி.
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் பிறந்த கோமாலிகா பாரி, டாடா வில்வித்தை அகாதெமியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனையும், தரவரிசையில் 36ஆவது இடத்தில் உள்ளவருமான சோனோடா வாகாவை வீழ்த்தி வெற்றி பெற்றார் கோமாலிகா.
சர்வதேச அளவில் ஜூனியர் மகளிர் பிரிவில் உலக சாம்பியனான இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை கோமாலிகா பாரி பெற்றார். இதற்கு முன்பு, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தீபிகா குமாரி ஜூனியர் பிரிவில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருந்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் பல்தான் ஹன்ஸ்டா தங்கம் வென்றார்.
ஆடவர் மற்றும் மகளிரை சேர்த்து ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் வில்வித்தைப் போட்டியில் வென்ற இந்தியர்கள் என்று பார்த்தால் கோமாலிகா மூன்றாவது இந்தியர் ஆவார்.
மகளிர் பிரிவைப் பொறுத்தமட்டில் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
வெற்றிக்குப் பிறகு கோமாலிகா கூறுகையில், இந்த வெற்றியைப் பெருமையாகக் கருதுகிறேன். நான் வெற்றி பெற்றதற்கு எனது பயிற்சியாளர்களும்மிக முக்கியக் காரணம். விளையாடிக்கொண்டிருக்கும்போது, நம்பிக்கையுடன் இரு; நீ கட்டாயம் சாம்பியன் பட்டம் வெல்வாய் என்று எனக்கு நானே நம்பிக்கை வார்த்தைகளை கூறிக் கொண்டேன் என்றார்.
ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில், கலப்புப் பிரிவில் (இஞஙடஞமசஈ பிரிவு) தங்கமும், ஜூனியர் ஆடவர் பிரிவில் வெண்கலமும் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
இலக்கைக் குறிவைத்து வில்லைக் கொண்டு அம்பை துல்லியமாக எய்தும் வில்வித்தை விளையாட்டு, இந்தியாவின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாகும்.
வில்வித்தைப் போட்டியில் சிறார்கள் அதிக அளவில் ஈடுபடுவதற்கு உந்துசக்தியாக இருக்க இந்தியர்கள் சர்வதேச அளவிலான வெற்றிகளை தொடர்ந்து பெற வேண்டும்.