இளைஞன் ஒருவன் காட்டில் சென்று கொண்டிருந்தான். பசியெடுத்தது. ஒரு மரத்தில் பழங்களை கண்டான். மரத்தில் ஏறி பழங்களைப் பறித்தான். மேலும் பழங்களை பறிக்க நகர்ந்த போது கிளை முறிந்தது. சுதாரித்த அவன் கீழே ஒரு கிளையைப் பிடித்து தொங்கினான். தரையோ தூரத்தில் இருந்தது. பயந்து போன அவன் யாராவது காப்பாற்றுங்கள் என அலறினான். அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் அவன் மேல் சிறிய கல்லை எறிந்தார். வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம். ‘பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே‘ என கோபப்பட்டான். பெரியவர் மற்றொரு கல்லை எறிந்தார். கோபமுற்ற இளைஞன் முயற்சி செய்து மேலிருந்த கிளையை பற்றிக் கொண்டு ‘உம்மை சும்மா விட மாட்டேன்’ என சண்டை போட்டான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை வீசினார். இளைஞன் முயற்சி செய்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி அவரிடம் வந்தான். ‘ஏன் அப்படிச் செய்தீர், நான் உதவிதானே கேட்டேன்’ என்றான். பெரியவர் சிரித்துக்கொண்டே தம்பி நான் உனக்கு உதவிதான் செய்தேன் என்றார். இளைஞன் விழித்தான். ‘நான் உன்னை முதலில் பார்த்தபோது பயந்திருத்தாய், உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை எறிந்ததும் பயம் போனது. என்னை பிடிப்பது குறித்து யோசித்தாய். நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கினாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று உணர்த்தத்தான் உன்னை நான் அடித்தேன்’ என்று சொல்லி விட்டுத் தன் வழியே போய் விட்டார்.