இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலையடைய வேண்டாம், விரைவில் வெற்றியை ஈட்டுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சந்திரயான் – 2′ விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
சந்திரயான் – 2 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண,கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, ‘இஸ்ரோ’ கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
லேண்டர் தரையிறங்குவதை காண இஸ்ரோ வந்திருந்த பிரதமர் மோடி, சிக்னல் துண்டிக்கப்பட்டதால் ‘விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்’ . தைரியமாக இருங்கள் என இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டினார்.
பின்னர், சில மணிநேரங்களாக ஒட்டுமொத்த தேசமே கவலையுற்று இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நமது விஞ்ஞானிகளுக்கு ஆதரவை தெரிவிக்க வேண்டும். நமது விண்வெளி திட்டம் என்பது மிகவும் பெருமைக்குரியது. சந்திரயான்-2 ஆராய்ச்சியில் ஏற்பட்ட தடங்கல் இன்று சரி செய்யப்பட்டு நாம் நிலவை தொடுவோம். இன்னும் வலிமையாக உருவெடுப்போம். நாம் மேலும் உயரே பறப்போம். வெற்றியை தொடுவோம். விஞ்ஞானிகளே இந்த நாடே உங்கள் பின்னால் அணி வகுத்து நிற்கிறது. கவலைப்பட வேண்டாம். உங்களது அளப்பரிய பணிகள், அனுபவம், திறன் ஆகியவை இந்தியாவை மென்மேலும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
நமது பயணத்தின் பாதையில் தடைகள் வரத்தான் செய்யும். அதனை தகர்த்பபோம். விஞ்ஞானிகளின் குடும்பத்தினருக்கு எனது தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது ஒத்துழைப்பு, உறுதுணையும் விஞ்ஞானிகளுக்கு மிகவும் அவசியம். உங்கள் கூட்டு உழைப்பு என்னென்றும் வெற்றியை ஈட்டி தரும். எனவே விஞ்ஞானிகள் தொடர்ந்து பெருமையுடன் பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.