ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியர்களை பிரச்சாரக் என்று குறிப்பிடுவார்கள். நாட்டுக்காக முழு நேரமும் சிந்தனை செய்யக்கூடிய வாழ்க்கை வாழும் அத்தகைய பல்லாயிரக்கணக்கான வெள்ளாடைத் துறவிகளை கடந்த 94 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி வருகிறது. அவர்களில் ஒருவரைப் பற்றி இன்னொருவர் தன் பெயரும் குறிப்பிடாமல் மற்றவர் பெயரும் குறிப்பிடாமல் பதிவு செய்யும் நினைவுத் துளிகள் இவை:
அரசுத்துறையில் பணியாற்றுகையில் தினசரி ஷேவ் செய்துகொள்வது என்பது எனக்கு சகஜம் ஆகிவிட்டிருந்தது. நான் பிரச்சாரக் ஆக வந்த பிறகும் அந்த பழக்கம் தொடர்ந்தது. ஒருநாள் எனது மாதாந்திரச் செலவுக் கணக்கில் மாதம் ஒரு பாக்கெட் பிளேடு என இருப்பதைப் பார்த்துவிட்டு மூத்த பிரச்சாரக் சொன்னார்: ”ஒரு பிளேடை மேலும் கொஞ்சம் அதிகமான தடவை எப்படி உபயோகிக்கலாம் என்று யோசிக்க முடியுமா?” அதன் பிறகுதான் கவனித்தேன், அந்த பிரச்சாரக் ஒரே பிளேடை மீண்டும் மீண்டும் பயன்படுத்த பல்வேறு உத்திகளை கையாள்கிறார் என்று.
சட்டையின் காலர் பகுதி நைந்து போய்க் கிழிந்துவிட்டிருந்தது. அதை தானே பிரித்து திருப்பி வைத்து தைத்துக் கொண்டிருந்தார் அந்த பிரச்சாரக்.
சங்க சிக்ஷா வர்கவில் (முகாமில்) கண சிக்ஷக் பொறுப்பு தவிர சமையல்கட்டில் உதவியாளர் என்கிற பணியிலும் அவர் ஈடுபட்டிருந்தார். மாலை நேர சங்கஸ்தான் பயிற்சி முடித்து வியர்க்க விறுவிறுக்க வரும் சிக்ஷார்த்திகளுக்கு சூடான அரிசிக் கஞ்சி தயார் செய்து வைத்திருப்பார் குடிக்க.
பொள்ளாச்சியில் நடைபெற்ற சங்க சிக்ஷா வர்க பயிற்சிக்கு குறைந்த விலையில் அரிசியை வாங்கி சுத்தப்படுத்தி காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்தார். அவர் இதற்காக மிகப் பெரிய காரியங்களை செய்ய வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் அரிசியை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்ல தடை இருந்தது. அரசின் விசேஷ அனுமதி தேவைப்படும்.
சென்னை ஆர்.எஸ்.எஸ் காரியாலயத்தில் நூலகத்தை உருவாக்கியதில் மிகப்பெரிய பங்கு அந்த பிரச்சாரகருக்கு இருந்தது. இரவு பகல் எந்நேரமும் இந்தப் பணியில் அவர் ஈடுபட்டிருந்ததை அப்போதைய ஸ்வயம் சேவகர்கள் அனைவரும் கண்டதுண்டு.
மதுரையில் அந்த பிரச்சாரக் காலமானவுடன் அவரது முந்தைய விருப்பப்படி அவரது கண் தானம் செய்யப்பட்டது. இறைவன் திருவுள்ளம், மதுரை திராவிடர் கழகத் தலைவர் அவர்களுக்கு இவரது கண் பொருத்தப்பட்டது. அதுவும் தவிர அவரது கண்களின் வெண்மை நிறப் பகுதியும் கண் பார்வை குறை உள்ள நோயாளிகளுக்கு கண்ணுக்குள் வைத்து தைக்கப்பட்டது. தமிழ் நாட்டில் நடைபெற்ற விசேஷமான கண் அறுவை சிகிச்சை அது எனலாம்.
அந்த மூத்த பிரச்சாரக் குறித்து இன்னும் எண்ணற்ற விஷயங்கள் இருப்பினும் பத்திரிகையில் இடப் பற்றாக்குறை காரணமாக சுருக்கமாக சொல்லப்பட்டது.