புதிய சிலபஸ் என்ற இந்த நூலை எழுதியவர் ஒரு பள்ளி ஆசிரியரோ கல்லூரி பேராசிரியரோ அல்ல. நூலாசிரியர் கோ. வரதராஜன் தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் நடத்துனராக பணி புரிந்து ஒய்வு பெற்றவர். இவர் பணிக்காலத்தில் பொறுப்புணர்வுடன் பொது மக்களிடமும் மாணவர்களிடமும் அன்புடன் பழகி வந்தவர் என்று தெரிகிறது. நூலுக்கு வாழ்த்துரை அளித்துள்ள சுவாமி சாந்தானந்தா நூலாசிரியரை ‘நல்ல நடத்துனர்; நல்வழி நடத்துனர்’ என்று கௌரவிக்கிறார்.
தன்னுடைய பணியினூடேயும் தான் படித்து பழகி பெற்ற அனுபவங்களை நான்கு பகுதிகளாக (பொதுவியல், கல்வியியலும் தத்துவ இயலும், பொருளியல், விஞ்ஞான இயல்) தொகுத்து எழுதியுள்ளார். பொதுவியல் பகுதியில் வாழ்க்கைக்கான உயர் நெறிகளையும், வாழ்ந்து காட்டிய மகான்களையும், தேச விடுதலைக்கு உழைத்த பெரியோர்களையும் சொற் சித்திரமாக வரைந்துள்ளார். அவ்வப்பொழுது பொருத்தமான இடத்தில் நிகழ்கால நாட்டு நடப்புகளையும் அலசுகிறார். (உ..ம் : நீட் விவகாரம்- மாணவர்களை முடக்கிய ஊடகம் கைகோர்ப்பு- அத்தியாயம் 28)
கல்வியியலுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன், பொருளியலுக்கு J C குமரப்பா, அறிவியலுக்கு ஜெகதீஷ் சந்திர போஸ் என்ற நம் நாட்டில் பிறந்து உலக அளவில் புகழ் பெற்ற 3 மிகப் பெரிய ஆளுமைகளை எடுத்துக் கொண்டு விளக்கியுள்ளார். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் சாமான்யர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் பயனுள்ள முயற்சிக்கும் ஊக்கமளித்துள்ள பதிப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள்.