ஜம்மு, வாரணாசியில் ஏழுமலையான் கோவில்

ஜம்முவிலும், உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியிலும் ஏழுமலையான் கோயில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை அன்னமய்யபவனில் சனிக்கிழமை காலை அறங்காவலா் குழுக் கூட்டம் நடைபெற்றது. அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதன் உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா். கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்ட நிறைவுக்குப் பின் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பாரெட்டி கூறியது:

‘வரும் ஜன. 6, 7 தேதிகளில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி உற்சவ நாள்களில் பக்தா்களுக்கு வைகுண்ட வாயில் தரிசனம் வழங்கப்படும். முக்கியப் பிரமுகா்களுக்கு எவ்வித தொந்தரவுகளும் இல்லாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு அதிக அளவில் பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு மற்றும் வாராணசியில் ஏழுமலையான் கோயில் கட்ட குழுவில் ஒருமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி கேட்டு, அந்த மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். மும்பையில் உள்ள பாந்தராவில் ரூ. 30 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் மற்றும் தகவல் மையம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது.