தீபாவளி என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷம் உற்சாகங்களுக்கு குறைவிருக்காது. கங்கா ஸ்நானம், புதுத்துணி, பட்டாசு, பலகாரங்கள் என பண்டிகை களைகட்டும். தீபாவளி மட்டுமல்ல, நமது தேசத்தின் அனைத்து பண்டிகைகளும் ஆண்டுதோறும் உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். சுற்றத்துடனும் நட்புடனும் ஆனந்தமாக கொண்டாடப்படும் இந்த விழாக்களின் பின்னணியில் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமும் உள்ளது. நமது நாடு முப்படைகளின் பாதுகாப்பு வளையத்தில் உள்ளதால் நாம் பாதுகாப்பாக உள்ளோம். அதனால்தான் சந்தோஷத்துடன் விழாக்களை நாம் கொண்டாட முடிகிறது. இல்லையென்றால், ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்! மோடி, பிரதமராக பதவியேற்றப் பிறகு ஒவ்வொரு தீபாவளியையும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ வீரர்கள் மட்டுமல்ல, ஒட்டுநர்கள் துப்புரவு பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினர் என பலர் சமுதாய சேவைப்பணிகளை செவ்வனே செய்வதால்தான் மக்கள் சந்தோஷமாக பண்டிகைகளை கொண்டாட முடிகிறது. எனவே, நம் சொந்தபந்தக்களுக்கு வாழ்த்துகளை பரிமாறுவதற்கு முன் தங்கள் வீட்டில் குடும்பத்துடன் பண்டிகைகளை கொண்டாடும் சந்தோஷத்தை நமக்காக தியாகம் செய்யும் இவர்களுக்கு முதலில் தீபாவளி வாழ்த்துகளை கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.