உலக வங்கியின் வருடாந்திர மாநாட்டையொட்டி, இன்டர்னேஷனல் மானிடரி பண்ட் (ஐ.எம்.எப்) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நடைபெறும் 2021-22 நிதியாண்டில், பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி 12.5 சதவீதம் அதிகரிக்கும். அடுத்த நிதியாண்டில் அது மேலும் 6.9 சதவீதம் அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில், பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி சீனாவை விட அதிகமாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் ஐ.எம்.எப்., வெளியிட்டிருந்த பொருளாதார அறிக்கையில், 2021-22 நிதியாண்டில் பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதமாக இருக்கும் என கூறியிருந்தது. தற்போது அதனை உயர்த்தி 12.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘பாரதத்தின் 2021-22ம் நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்து உள்ளது. மேலும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக சில மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, உள்நாட்டு வளர்ச்சியில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவுகிறது. சந்தைகளில் போதுமான பணப்புழக்கம் நிலவும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். இந்திய நிதி நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.