வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்திப்பு – கே ஆர் மல்கானி

மகாத்மா காந்திக்கும் டாக்டர் ஹெட்கேவாருக்கும் இடையே நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்பு 1934 ல் நடந்தது.

1934 இல் டிசம்பர் மாதம் 23 – 25 மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வார்தா மாவட்டத்தில் ஆர்எஸ்எஸின் பனிக்கால முகாம் நடைபெற்றது. ஜமன்லால் பஜாஜ்-க்கு சொந்தமான பண்ணையில் அது நடந்தது . அதற்கு வெகு அருகில் இருந்த சத்யாகிரக ஆசிரமத்தில் தான் காந்திஜி தங்கியிருந்தார். அங்கிருந்து சங்க முகாமை பார்த்த காந்திஜி வெகுவாக ஈர்க்கப்பட்டார்.

அந்த முகாமில், மூத்த ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்தவர் அப்பாஜி ஜோஷி.அவர் அதற்கு முன்பு பல ஆண்டுகள் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தவர். எனவே கமல நயன பஜாஜ் அப்பாஜி ஜோஷி-யை அணுகி, நீங்கள் காந்திஜியை முகாமுக்கு வரும்படி நேரில் வந்து அழைப்பு விடுக்க வேண்டும், என்றார். அப்பாஜியும் அதை ஏற்று அவர் சொன்னபடியே செய்தார்.

அதன்படி (1934) டிசம்பர் 24 ம் தேதி காலை ஆறு மணிக்கு காந்திஜி முகாமுக்கு விஜயம் செய்தார். அவருடன் மீரா பென், ஹாவீர் தேசாய் மற்றும் சிலரும் முகாமுக்கு வந்திருந்தனர்.

முகாமில் நடந்த யோகாசன பயிற்சிகளை எல்லாம் பார்த்த காந்திஜி, அப்பாஜியின் தோள் மீது கை வைத்து, ‘ நான் இந்த முகாமை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டில் வேறெங்கும் இது போன்ற அருமையான நிகழ்ச்சியை நான் கண்டதில்லை’ , என்று கூறினார்.

பிறகு பகவா த்வஜம் ஏற்றப்பட்டது. காந்திஜியும் மற்றவர்களை (ஸ்வயம் சேவகர்களை) போல தக்ஷாவில் நின்று பிரணாம் செய்தார்.

Gandhi's Tryst with RSS - Organiser

 

பிறகு முகாமைச் சுற்றி பார்க்க வேண்டுமென்றார். அவருக்கு முகாம் சுற்றிக் காட்டப்பட்டது. அப்போது அவர் அங்கிருந்த சில ஸ்வயம் சேவகர்களிடம், அவர்களுடைய ஜாதி என்ன என்று கேட்டார். அவர் கேட்டவர்களில் ஒருவர் மஹர் ( பட்டியல் இனத்தை சேர்ந்தவர்), மற்றொருவர் திளி (எண்ணெய் செட்டி), மூன்றாமவர் மராட்டா (சத்திரியர்), நான்காமவர் பிராமணர். ஆர்எஸ்எஸ் – ஸால் எப்படி வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களை ஒன்றாக தங்கவும் விளையாடவும் சேர்ந்து சாப்பிடவும் வைக்க முடிகிறது என்று வியந்தார்.

பிறகு சங்கத்தின் வஸ்து பண்டாருக்கு (விற்பனையகம்) வந்தார். அங்கு ராமர், கிருஷ்ணர், சத்ரபதி சிவாஜி, மகாராணா பிரதாப், குரு கோவிந்த சிம்மன் படங்கள் இருப்பதை கண்டார். அங்கிருந்த பொறுப்பாளரை பார்த்து, ‘இங்கு ராமர், கிருஷ்ணர் படங்கள் இருக்கின்றன. சிவன், கணபதி எல்லாம் உங்களுக்கு கடவுளாக தெரியவில்லையா?’ என்று கேட்டார். ‘இங்கிருப்பவர்கள் கடவுளர்கள் அல்ல, தேசிய தலைவர்கள் ‘ என்று அவருக்கு பதில் அளிக்கப்பட்டது.

காந்தி புறப்படும் நேரம் வந்தது. அப்பாஜி அவரிடம் முகாமில் ஏதேனும் குறைகள் இருந்தால் சொல்ல வேண்டுமென கேட்டார். அதற்கு காந்திஜி, ” எந்த குறையும் இல்லை. எந்த விதத்தில் பார்த்தாலும் நீங்கள் செய்யும் பணி அபாரமாக இருக்கிறது. குறை என்று தேடிப்பார்த்தால் இந்த அமைப்பில் இந்து அல்லாத மற்ற மதத்தினரை சேர்த்துக்கொள்ளவில்லை என்பதை சொல்ல முடியும்” , என்று கூறினார்.

அதற்கு அப்பாஜி, இந்துக்களிடையே உள்ள பிரிவினையும் பலவீனமும் தேசத்தின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதனால் தான் ஆர்எஸ்எஸ் ஹிந்து ஒற்றுமையில் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில், ‘ நாங்கள் மற்ற மதத்தினரை வெறுக்க வில்லை’ என்று காந்திஜியிடம் கூறினார்.

பிறகு காந்திஜி, ‘ பிறரை வெறுக்காமல் இந்துக்களை ஒருங்கிணைப்பது தேச நலனுக்கு விரோதமான செயல் அல்ல. நான் உங்கள் தலைவருடன் சங்க கொள்கைகள் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் கேட்டு அறிய விரும்புகிறேன்’ ,என்று கூறினார்.

மறுநாள் டிசம்பர் 25 ம் தேதி டாக்டர் ஹெட்கேவார், அப்பாஜி ஜோஷி மற்றும் புனே – வை சேர்ந்த எல். பி. பூபாட்கர் ஆகியோருடன் இரவு 8.30 மணிக்கு காந்திஜியை சந்தித்தார். பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு காந்திஜி, ‘ டாக்டர் ஹெட்கேவார், இந்தியாவில் நான் மட்டும்தான் அமைப்பாளர் (மக்களை ஒருங்கிணைப்பவர்) என்று நினைத்திருந்தேன். நீங்கள் இன்னொருவர் இருக்கிறீர்கள்’ , என்றார்.

‘ உங்கள் கோஷ் (வாத்திய இசை) நன்றாக இருக்கிறது. அந்த இசையை கேட்க எனக்கு விருப்பமாக இருக்கிறது. நீங்களோ இரவு ஒன்பது மணிக்கு வாசிக்கத் தொடங்குகிறீர்கள். அது எனக்கு தூங்கும் நேரம். இருந்தாலும் நான் மாடிக்குச் சென்று அதை கேட்கிறேன்’ , என்றார்.

ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் தங்கள் உணவுக்கும் சீருடைக்கும் பயணத்திற்கும் சொந்த செலவு செய்தும் கட்டுப்பாடுடன் இருக்கிறார்கள். இதையெல்லாம் இலவசமாக கொடுத்தும் மற்ற அமைப்பு தொண்டர்கள் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறார்கள். இது எப்படி என்று காந்திஜி வியப்புடன் கேட்டார்.

அதற்கு டாக்டர் ஜி, ‘ சங்க சொற்பொழிவுகளில் தேசிய ஒருமைப்பாடு, தனி மனித ஒழுக்கம், தர்மத்தின் மீது பற்று, சமுதாயம், பண்பாடு, தேசம் ஆகியவற்றின் மீது மதிப்பு ஆகியவற்றை முன்வைக்கிறோம். வரலாற்று நிகழ்வுகளையும் ராமாயண மகாபாரத சம்பவங்களையும் கதைகளையும் அவர்களுக்கு சொல்லுவோம். இவை ஸ்வயம் சேவகர்களிடையே உயர்ந்த பண்புகளையும் லட்சியத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாட்டையும் ஏற்படுத்துகிறது ‘ .

‘மற்ற அமைப்பினர் தொண்டர்களை ‘இலவச தொழிலாளர்’களாக கருதுகின்றனர். ஆனால் ஆர்எஸ்எஸ் தன் ஸ்வயம்சேவகர்களை நாட்டிற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் முதல்தர தேசபக்தர்களாக பார்க்கிறது’ , என்று விளக்கினார்.

‘உங்கள் பணி தேசத்திற்கு மிகவும் தேவையானது’, என்று கூறிய காந்திஜி உங்கள் சங்கத்தின் அமைப்பு விதிமுறைகளின் பிரதி ஒன்றை கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு, அமைப்பு விதிமுறைகள் என்று எதுவும் எழுதி வைக்கவில்லை. அதற்கு தேவையும் ஏற்படவில்லை, என்று பதில் கிடைத்தது.

அதற்கு காந்திஜி, ” எனக்கும் இது போன்று கருத்து இருந்தது. இன்றில்லாவிட்டாலும் வேறொரு நாள் நீங்கள் இதை செய்ய வேண்டிவரும். ஆனாலும் நீங்கள் உங்கள் அமைப்பில் ஏற்படுத்தி உள்ள உயர்ந்த பண்புகளையும் அமைப்பு நடத்தும் விதமும் அதன் சீரிய கட்டுப்பாட்டையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்க லட்சியம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்”, என்றார்.

“உங்களைப் போன்ற மகான்களின் ஆசிகள்தான் எங்கள் வலிமை” என்று டாக்டர் ஜி சொன்னார்.

பலரும் ஆர் எஸ் எஸ் வை ‘ டாக்டர் ஹெட்கேவாரின் சங்கம்’ என்றே பார்த்தனர். அவர் காலமானவுடன் அந்த சங்கமும் காலாவதி ஆகிவிடும் என்றே அவர்கள் நினைத்தனர். ஆனால் டாக்டர் ஜி தன் உடலை உகுத்த அன்றிரவே ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தத்தம் கிளைகளில், செய்யவேண்டிய மகத்தான பணி இன்னும் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

அதுதான் ஆர் எஸ் எஸ் லட்சியத்தின் வலிமை. அதுதான் ஆர்எஸ்எஸ் செயல்முறையின் சிறப்பு. அதனால் தான் அடுத்த சில ஆண்டுகளில் சங்கத்தின் வளர்ச்சி மேலும் உயர்ந்தது.