தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்கு அடுத்து அதிகமான பாடல்களை எழுதியவர், இலக்கியச் சாரத்தை திரைப்படப் பாடல்களில் கலந்து கொடுத்தவர், மூன்று தலைமுறைகளுக்கு திரைப்பாடல் எழுதியவர் என பெருமை பெற்றவர் கவிஞர் வாலி.
திருப்பராய்த்துரையில் பிறந்து வளர்ந்து கையெழுத்து ஏட்டின் ஆசிரியராக இளம் வயதிலேயே உருவானவர் டி.எஸ்.ரங்கராஜன். பள்ளித் தோழன் சூட்டிய புனைப்பெயரான வாலியே அவரது பெயராய் பின்னாளில் நிலைத்தது.
வானொலி நாடக ஆசிரியர், சிற்றிதழ் ஆசிரியர், ஓவியக் கலைஞர், எழுத்தாளர், வசனகர்த்தா, புதின படைப்பாளி, கவிஞர், நடிகர் என பன்முகத் திறமைகள் பெற்றிருந்தாலும் திரைப்பட பாடலாசிரியராகத்தான் பலராலும் அறியப்பட்டார். சிறந்த பாடலாசிரியர் விருது, மாநில விருது, தேசிய விருது, பத்மஸ்ரீ போன்ற பல விருதுகளை பெற்றவர் வாலி.
அவதாரப் புருஷன், அம்மா, பொய்க்கால் குதிரைகள், ராமானுஜ காவியம், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
காதல், தத்துவம், ஆன்மீகம், அரசியல், இலக்கியம் உள்ளிட்ட சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக பாடல்களை இயற்றிய வாலி, கதைக்கும் கதை மாந்தருக்கும் ஏற்ப கருத்தையும் எளிமையான சொற்களையும் கொண்டு 15000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார்.
திரைப்படங்களுக்கு பாடல் எழுத வயது ஒரு தடை இல்லை என்பதை நிருபித்து, எழுத்துலகில் ‘மார்கண்டேயக் கவிஞர்’ என அனைவராலும் புகழப்பட்டவர் கவிஞர் வாலி. ‘கவியரசர் கண்ணதாசனுக்கு’ பிறகு தமிழ் திரையுலகம் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது இவரின் காலங்களில்தான் என்றால் அது மிகையல்ல.
கவிஞர் வாலியின் பிறந்த தினம் இன்று.