வன்முறையால் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது – ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர்

”வன்முறை மற்றும் ஆயுதங்களால், எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. அமைதி பேச்சு மூலம், எல்லா பிரச்னைக்கும் தீர்வு காணலாம்,” என, பிரதமர் மோடி பேசினார்.

அறிவுரை

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று, ரேடியோ மூலமாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவுரை, செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளக்கம், முக்கிய பிரச்னைகள் குறித்து, இந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகிறார். காலை, 11:00 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடப்பது வழக்கம். ஆனால், நேற்று குடியரசு தின விழா நடந்ததால் மாலையில், பிரதமர் மோடி உரையாற்றினார்.

சமீபகாலமாக நாட்டு மக்களிடம், நாமும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு ஏதாவது பங்காற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. இது தொடர்பாக ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு அடிப்படையாக உள்ளது. ஒவ்வொரு மாதமும், ஆயிரக்கணக்கானோர், தங்கள் கருத்து, அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

துாய்மை இந்தியா, மகள்களுடன், ‘செல்பி’ மற்றும் கதர் ஆடைகள் அணிவது போன்வற்றில் மக்கள் காட்டும் ஈடுபாடு காரணமாக, ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி, ஒரு பெரிய இயக்கமாக மாறி வருகிறது. மக்களின் சாதனைகளை விவாதிப்பதற்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது.

வேலையில்லை

நாட்டு மக்கள், 130 கோடி பேரும்,ஒரு அடி முன் எடுத்து வைத்தால், நம் நாடு, 130 அடி முன்னோக்கி செல்லும். சமீபகாலமாக, வட கிழக்கு மாநிலங்களில் வன்முறை, தாக்குதல்கள் குறைந்து வருகின்றன. வன்முறையாலும், ஆயுதங்களாலும் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து விட்டனர். இதுவரை வன்முறையால் பாதிக்கப் பட்டிருந்த பகுதிகள் கூட, சகோதரத்துவமும், ஆரோக்கியமான பேச்சுமே பிரச்னைக்கு தீர்வு என்ற முடிவுக்கு வந்து விட்டன.

நாட்டின் எந்த பகுதியிலும் இனி வன்முறைக்கு வேலையில்லை. வன்முறையை கை விட்டு, ஆயுதங்களை வீசியெறிந்து விட்டு, பேச்சு நடத்த அனைத்து தரப்பினரும் முன் வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.