பாரதத்தின் பண்பாட்டோடு இரண்டற கலந்தவர்கள் வனவாசிகள். இந்த வனவாசி சமூகத்தினர் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் வெகு தொலைவில் உள்ளதால் உரிய கவனிப்பின்றி ஏறத்தாழ ஒதுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர் என்பதுதான் கசப்பான உண்மை.
இருட்டை விரட்டும் வெளிச்சமாக, வனவாசி சமூகத்தினரின் வாழ்வில் இடரை நிர்மூலமாக்கி சுடரைப் பாய்ச்சும் அமைப்பாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இயங்கி வருகிறது.
வனவாசி கல்யாண் ஆசிரமம், ஏகல் வித்யாலயா, சேவா பாரதி போன்ற அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ் சார்புடையவை. இந்த அமைப்புகள் வனவாசி சமூகத்தினரின் கல்வி, சுகாதாரம், திறன்மேம்பாடு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. தன்னார்வலர்களே இதில் ஈடுபட்டுள்ளனர். வனவாசி சமூகத்தினர் தற்சார்பு கொண்டவர்களாக உயர்ந்தோங்க வேண்டும். அவர்களிடையே நிலைத்த வளர்ச்சி மேலோங்க வேண்டும். பழமையிலிருந்து மாறாமல், ஆனால் அதே நேரத்தில் தேவையான நவீனங்களையும் உள்ளடக்கிய வகையில் எழுச்சி ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 2047ம் ஆண்டு பாரத சுதந்திர நூற்றாண்டு விழா வருகிறது. நம் தேசத்தின் வளர்ச்சி எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் வகையில் வனவாசி சமூகத்தினரை மேம்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
வனவாசிகளின் பழக்க வழக்கங்கள், மொழிகள், நாட்டுப்புறக் கலைகள் காலங்காலமாக வழிபட்டு வரும் தெய்வங்கள், சமய ரீதியான கொண்டாட்டங்கள், பண்பாட்டு விழாக்கள் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
சிரத்தா ஜாக்ரண் வனவாசி சமூகத்தினரிடையே அன்னிய அம்சங்கள் குறிப்பாக பாரத நாட்டுக்கு புறம்பானவை. ஊடுருவி விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. பாரத மண்ணுக்கு அன்னியமாக உள்ள விரும்பத்தகாதவற்றை விஷமிகள் திணிக்க முற்பட்டால் அதை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும் என்பதுதான் சிரத்தா ஜாக்ரணின் மையக்கருத்தாகும்.
வனவாசி சமூகத்தினர் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. வனவாசிகளிடையே சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திறன்மேம்பாடு சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரிய கைவினைத் தொழிலுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கைவினைப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிசைத் தொழிலுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு நெடுகிலும் 56 வேளாண் மேம்பாட்டு மையங்களை வனவாசி கல்யாண் ஆசிரமம் நடத்தி வருகிறது. இதேபோல 104 பயிற்சி மையங்களையும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது. 3,348 சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வனவாசி மக்களுக்கு போதுமான வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் தங்களது வாழ்விடங்களை விட்டு நகரங்களை நோக்கி நகர வேண்டிய அவசியம் ஏற்பட இடங்கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வனவாசி சமூகத்தினரிடையே தன்னார்வலர்கள் நெருக்கமாக உள்ளனர். இந்த பந்தம்தான் இரு தரப்பினருக்கிடையே பாலமாக உள்ளது. சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த இது உதவுகிறது. இந்த அமைப்புகள்
ஆர்.எஸ்.எஸ் வாயிலாகப் பெற்றுள்ள உந்து சக்திதான் இப்பணிகள் யாவற்றுக்கும் ஆணி வேராக உள்ளது. இந்த அர்ப்பணிப்புடன் கூடிய சேவை பிரதான ஊடகங்களில் வெளிச்சம் பெறாமல் இருக்கலாம். வெளிச்சப்படுத்தப் படுபவையே சிறப்பானவை என்றோ வெளிச்சப்படுத்தப்பாடதவை சிறப்பற்றவை என்றோ முடிவுகட்டி விடக்கூடாது. கண்ணுக்குத் தெரியாத ஆணிவேரும், மற்ற வேர்களும் விருட்சத்தை தாங்கிப் பிடித்திருப்பதுடன் அதன் உயிர்ப்பை நெடிதோங்கவும் வைக்கின்றன. வனவாசி கல்யாண் ஆசிரமம், ஏகல் வித்யாலயா, சேவா பாரதி உள்ளிட்ட அமைப்புகளும் இவ்வாறே இயங்கி வருகின்றன.
கட்டுரையாளர்: துணைப் பேராசிரியர்,
எஸ்.எல்.சி. டெல்லி பல்கலைக்கழகம்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி