ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது. இதன்பின்பு இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 2003ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் அமைதி மற்றும் கட்டுப்பாடு நீடிக்க செய்ய இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த புரிந்துணர்தலை கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து இந்தியா அந்நாட்டுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து இதனை மீறி வருகிறது. இதில் சில நேரங்களில் சாதாரண ஆயுதங்களை கொண்டும், சில நேரங்களில் பெரிய வகை ஆயுதங்களை கொண்டும் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதைத் தடுக்க ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல்கள் நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. லஷ்கர் இ தொய்பாவின் தளபதியான அபு உசாயில் இந்தியா விரைவில் மிகப்பெரிய தற்கொலைப்படைத் தாக்குதலை சந்திக்க உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும்,
இதற்காக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பஹாவல்புரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், மசூத் அசார், அவனது சகோதரன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் பலர் அங்கு திரண்டிருப்பதாகவும் உளவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து முக்கிய நகரங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் குவியும் இடங்களில் தீவிர கண்காணிப்பும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.