திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பத்ரதீபத் திருவிழா நடைபெற்றுவருகிறது. இத்திருவிழாவின் போது பத்தாயிரம் விளக்குகள் ஏற்றப்படும். ஆறாண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று, லட்சதீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம் மற்றும் லட்சதீப திருவிழாக்களின்போது மணி மண்டபத்தில் தங்கவிளக்கு, 2 வெள்ளி விளக்குகள் மற்றும் அவற்றைச் சுற்றி 8 தீபங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது. சிவபெருமானின் பஞ்சசபைகளில் தாமிரசபையாக இங்கு போற்றப்படுகிறது. இறைவன் நெல்லையப்பராகவும். வேணுவனநாதராகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சிவபெருமான் நெல்லுக்கு வேலி அமைத்து மழையிலிருந்து காத்து நைவேத்யம் படைக்க அருளிய நெல்வேலி நாதன எனப் போற்றப்படுகிறார்.
நான்கு வேதங்களும் சிவனுக்கு நிழல் தருவதற்காக தவமிருந்து வரம் பெற்றன. மூங்கில் மரத்தின் நிழலில் இறைவன் எழுந்தருளினார். மூங்கில் வனத்தில் லிங்கமாக மறைந்திருந்த இறைவன் ஒருநாள் தன்னைத் திருவிளையாடல் மூலம் வெளிப்படுத்தினார். மூங்கில் வனத்தில் வெளிப்பட்ட இறைவன் வேணுவனநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆண்டுக்கான லட்சத்தீப திருவிழா கடந்த 13ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வேணுவனநாதர் மூலஸ்தானத்தில் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனை.. அம்பாள் ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்துவருகிறது. இந்த சிறப்பு யாகம் வருகிற 24ஆம் தேதி வரை நடக்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கோவில் மணிமண்டபத்தில் தங்க விளக்குத் தீபம் ஏற்றப்பட்டது.
இத் தீபம் தை அமாவாசைநாளான ஜனவரி 24 இரவு 7 மணி வரை தொடர்ந்து ஜ்வலித்துக்கொண்டு இருக்கும். அன்று மாலை ஆலயத்தின் உள் சன்னிதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்மன் உள் சன்னிதி, மற்றும் வெளிப் பிரகாரங்கள் ஆகிய இடங்களில் லக்ஷதீபம் ஏற்றப்படுகிறது.
தை அமாவாசை இரவு அருள்மிகு சுவாமி, அருள்மிகு அம்பாள் வெள்ளி ரிஷப வாஹனத்திலும், அருள்மிகு விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாஹனத்திலும், அருள்மிகு சண்முகர் தங்கச் சப்பரத்திலும், அருள்மிகு சண்டிகேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சுற்றி பின்னர் இரவு பத்து மணிவாக்கில் நெல்லை டவுண் இரத வீதிகளில் வீதி உலா நடக்கிறது.