ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ தளவாடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான நம் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேச்சில், அமெரிக்காவிடம் இருந்து, 21.56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதைத் தவிர, எரிசக்தி துறை உள்பட, மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில், ‘நமஸ்தே டிரம்ப்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை, குடும்பத்துடன் பார்வையிட்டார். நேற்று முன்தினம் இரவே, டில்லிக்கு திரும்பினார்.

அணிவகுப்பு மரியாதை

நேற்று காலையில், ராஜ்காட்டில் உள்ள மஹாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின், ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.அதன்பிறகு, அதிபர் டொனல்டு டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான பேச்சு நடந்தது. இதில், எரிசக்தி துறை உள்பட, மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஐந்து மணி நேரம் நடந்த பேச்சுக்கு பிறகு, இருவரும், பத்திரிகையாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அதிபர் டிரம்ப் கூறியதாவது:இந்தப் பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்று. அங்கு, 1.25 லட்சம் பேர் கூடியிருந்தனர்.

ஆனால், அவர்கள் எனக்காக கூடியவர்கள் அல்ல. பிரதமர் மோடிக்காக கூடியவர்கள். நான் ஒவ்வொரு முறை மோடியின் பெயரைக் குறிப்பிட்டபோதும், அவர்கள் கரகோஷம் எழுப்பினர்.மோடி உடனான பேச்சின் போது, மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இதைத் தவிர, 21.56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. மிக அதிநவீன அப்பாச்சி, எம்.எச். – 60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு கிடைக்க உள்ளன.இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, இப்போதுள்ளதைவிட சிறப்பாக இதுவரை இருந்ததில்லை. மிகச் சிறந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பாக்.,குடன் பேசுவோம்

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். அடிப்படைவாத இஸ்லாமிய பயங்கரவாதத்தில் இருந்து இரு நாட்டு மக்களையும் காப்பாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். தங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தானுடன் பேசுவோம்.இரு நாடுகள் இடையேயான பொருளாதார உறவை வலுப்படுத்தும் வகையில், அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி ஒத்துழைப்பு அமைப்பின் அலுவலகம், இந்தியாவில் துவக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு, இரு நாடுகளுக்கு இடையேயானது அல்ல; அது மக்களுக்கு இடையேயானது. அதிபர் டிரம்புக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு எப்போதும் நினைவில் நிற்கக் கூடியது.

இந்தியா, அமெரிக்கா இடையேயான நட்பை, ஒருங்கிணைந்த சர்வதேச ஒத்துழைப்பு நிலைக்கு எடுத்துச் செல்ல இருவரும் முடிவு செய்துள்ளோம்.ராணுவத் துறையில் புதிய ஒப்பந்தம் செய்வது குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது, இரு தரப்பு ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்கான வழிமுறைகளையும் உருவாக்கி உள்ளோம்.தன் நேரத்தை ஒதுக்கி, இந்தியாவுக்கு வந்ததற்காக டிரம்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

சி.ஏ.ஏ., குறித்து பேசவில்லை

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான பேச்சு குறித்து, வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் சிருங்கலா கூறியதாவது:பல்வேறு விஷயங்கள் குறித்து, இரு தலைவர்களும் பேசினர். குறிப்பாக, பாதுகாப்பு, ராணுவம், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் மக்கள் இடையேயான தொடர்பு ஆகிய ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்பட்டது.ராணுவத் துறையில் அதிக ஒத்துழைப்பு அளிக்கப்படும் என, டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

வர்த்தகத் துறையில், மிகப் பெரிய முன்னேற்றம், இந்தப் பேச்சில் ஏற்பட்டுள்ளது.சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து எதுவும் பேசப்படவில்லை. அதே நேரத்தில், மதச் சுதந்திரம் பிரச்னை தொடர்பாக ஆரோக்கியமான முறையில் பேச்சு நடந்தது. இந்தியாவில் மத ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் நிலவுவதாக, ஆமதாபாத் நிகழ்ச்சியில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே, இரண்டு நாடுகளின் எண்ணம் என்பதை, இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர்.ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, அங்கு மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து, இருவரும் பேசினர். பாகிஸ்தான் தொடர்பான பேச்சின்போது, எல்லை தாண்டி நடைபெறும் வன்முறைகள் குறித்து, தன் கவலையை பிரதமர் மோடி தெரிவித்தார்.எச்1பி விசா பிரச்னை தொடர்பாகவும் பேசப்பட்டது. அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு குறித்து, மோடி குறிப்பிட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.

‘கொரோனா’ விரைவில் சீராகும்

டில்லியில் நேற்று நடந்த, இந்திய தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உடனான சந்திப்பின்போது, டிரம்ப் கூறியதாவது:’கொரோனா’ வைரஸ் பாதிப்பு மிக விரைவில் சீராகும். இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த சீனா சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன் பேசினேன். அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கையால், விரைவில் நிலைமை சீராகும். இந்த வைரஸ் பாதிப்பை கடுப்படுத்த, புதிய மருந்து மற்றும் தடுப்பூசி தயாரிக்க, அமெரிக்கா, 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட உள்ளது. அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும். தொழில் துவங்க உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.இந்த சந்திப்பின்போது, முகேஷ் அம்பானி, ஆனந்த் மகிந்த்ரா, என். சந்திரசேகரன், குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்ட தொழிலதிபர்கள், நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றனர்.

எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு

நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க அதிபர் டிரம்புடன் வந்துள்ள அமெரிக்க எரிசக்தி துறை செயலர் டான் புரோவில்லே கூறியதாவது:அமெரிக்காவிடம் இருந்து, 2017ல் இருந்து, இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அமெரிக்காவிடம் இருந்து, ஒரு நாளுக்கு, 25 ஆயிரம் பேரல் எண்ணெயை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்து வந்தது. அது தற்போது, 10 மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது, நாளொன்றுக்கு, 2.50 லட்சம் பேரல் எண்ணெயை, இந்தியா வாங்குகிறது.

இந்தியா, அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில், அமெரிக்கா, 6வது இடத்தில் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.ஒரு பேரல் என்பது, 159 லிட்டர் கொள்ளளவு உடையது.