ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடந்ததை தொடர்ந்து அயோத்தியில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்தும், சரயு நதியில் நீராடியும் குதூகலித்தனர்.
பல்லாண்டு கால சட்ட போராட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து, ராமபிரான் அவதரித்த அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், பூமி பூஜையும் நேற்று முன்தினம் நடந்தது. இது நாடு முழுவதும் மிகப்பெரும் கொண்டாட்டங்களை உருவாக்கி உள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வுகளை தொடர்ந்து அயோத்தியில் மக்களிடம் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அயோத்தியில் நேற்று குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அனுமன்ஹார்கி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அங்குள்ள சரயு நதிக்கரையில் பலர் செல்பி புகைப்படம் எடுத்தனர். பலர் சரயு நதியில் நீராடி மகிழ்ந்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தியவாறே இருந்தனர். இந்த நாளுக்காகத்தான் மக்கள் நீண்டகாலமாக காத்திருந்ததாக அவர்களும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
அயோத்தியில் வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கடைகளை திறந்து வணிகம் மேற்கொண்டுள்ளனர். அனுமன் கோவிலை சுற்றி உள்ள பல்வேறு கடைக்காரர்கள், ராமர் கோவில் கட்டப்பட்டால் தங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் என தெரிவித்தனர்.
டைம் சதுக்கத்தில் கொண்டாட்டம்
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வுகளை அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடினர். இதற்காக பல இடங்களில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பாரம்பரிய உடைகளை அணிந்து மக்கள் பங்கேற்றனர்.
நியூயார்க்கில் உள்ள டைம் சதுக்கத்தில் உள்ள ராட்சத தூண்களில் ராமபிரானின் படங்கள், கோவிலின் மாதிரி தோற்றம், இந்திய மூவர்ண கொடி படம் போன்றவை ஒளிபரப்பப்பட்டன. அங்கு ஏராளமான இந்தியர்கள் கூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்கள் தங்கள் வீடுகளிலும் விளக்கேற்றி குதூகலித்தனர்.
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கது என முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (எம்.ஆர்.எம்.) என்ற இஸ்லாமிய அமைப்பு வரவேற்றுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரான எஸ்.கே.முத்தின் கூறுகையில், ‘ராமர் கோவிலுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியபின் ஏற்பட்டுள்ள அமைதியும், நல்லெண்ணமும், ராமர் கோவிலுக்கு முஸ்லிம்கள் மவுன சம்மதம் வழங்கியிருப்பதையே காட்டுகிறது. இந்த அடிக்கல் நாட்டுவிழா, எங்களுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். நமது மூதாதையரோ, நமது எதிர்கால தலைமுறையினரோ பார்க்க முடியாததை நாம் பார்க்க முடிந்துள்ளது’ என்று கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்த சுப்ரீம் கோர்ட்டு, மசூதி கட்டுவதற்காக உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் தனியாக அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அயோத்தி தண்ணிபூரில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு உள்ளது. அதில் மசூதி கட்டுவதற்கான நடவடிக்கைகளை வக்பு வாரியம் தொடங்கி உள்ளது.
இதற்காக இந்தோ-இஸ்லாமிக் கலாசார அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளைக்காக லக்னோவில் அலுவலகம் ஒன்று அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும், அதில் பராமரிப்பு பணிகள் விரைவில் முடித்து 10 நாட்களில் அலுவலகம் செயல்பட தொடங்கும் எனவும் அறக்கட்டளை செயலாளர் அதர் உசேன் தெரிவித்தார்.