ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மீது காங்கிரஸ் காட்டிய அதீத விருப்பத்தால் அங்கு ராணுவ வீரர்கள் பலியாகினர் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சிக்குத் துணிவிருந்தால், “மக்களவைத் தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து ரத்து முடிவை திரும்பப் பெறுவோம்’ என்று மக்களிடம் வாக்குறுதி அளிக்கட்டும் என்றும் அவர் சவால் விடுத்தார். ஹரியாணா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள வல்லப்கர் நகரில் தனது முதல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி திங்கள்கிழமை உரையாற்றினார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற மிகப்பெரிய முடிவுகளை இந்தியா தற்போது மேற்கொள்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் முன்பெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாதவையாக இருந்தன. மக்கள் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் கிடைத்த பலமே, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை எடுக்க எனக்கு தைரியம் அளித்தது. அந்த முடிவாலேயே ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் தற்போது வளர்ச்சிப் பாதைக்கு திரும்புகின்றன
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறது. “மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறுவோம்’ என்று முடிந்தால் காங்கிரஸ் கட்சி மக்களிடம் கூறட்டும்.
அந்த முடிவை அடுத்த மக்களவைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்கும் துணிச்சல் காங்கிரஸுக்கு உள்ளதா?
370-ஆவது பிரிவால்தான் காஷ்மீரில் ராணுவத்தினர் பலியாகினர். அந்தப் பிரிவின் மீது தனக்கு இருக்கும் அதீத விருப்பம் குறித்து உயிரிழந்த ராணுவத்தினரின் குடும்பத்திடம் தெரிவிக்க காங்கிரஸுக்கு துணிச்சல் உள்ளதா?
ஜம்மு-காஷ்மீரில் உள்ள தலித் சமூகத்தினர் கெளரவமான தொழில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பலருக்கு 4 தலைமுறைகளாக துப்புரவுத் தொழிலைத் தவிர, வேறு பணிகளுக்கான வாய்ப்பு கிடைத்ததே இல்லை. அந்த மாநில மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டுவருவதற்கே எனது அரசு முன்னுரிமை அளிக்கிறது.