சத்ரபதி சிவாஜியின் குரு சமர்த்த ராமதாஸர். சமர்த்த ராமதாஸரின் சீடர்களுள் ஒருவர் ரங்கநாத கோஸ்வாமி என்பவர். இவர் துறவியேயாயினும் ஆடம்பரமாக வாழ்ந்தார். எப்போதும் பல்லக்கில்தான் செல்வார். இவருக்கு முன்பு கொடி, சாமரம், குதிரை, தீவர்த்தி என பரிவாரங்கள் புடை சூழ, கட்டியங்கூறி, கொம்பூதி அணி வகுத்துச் செல்வர். தங்குமிடத்தில் ராஜசமஸ்தானம் போல அறுசுவை உணவுகள் பரிமாறப்படும். இவரின் பகட்டைப் பார்த்து சில சீடர்கள் பொறாமையால் சமர்த்த ராமதாசரிடம் புகார் கூறினர். அவர் பதில் ஏதும் சொல்லாமல் கேட்டுக் கொண்டார்.
ஒருநாள் சமர்த்த ராமதாசர் ரங்கநாத கோஸ்வாமியிடம் ரங்கநாதா! இந்த ஆடம்பரத்தை எல்லாம் விட்டு விடேன்” என்றார்.
‘அப்படியே தங்கள் ஆணை’ என்றார் கோஸ்வாமி. அன்றுமுதல் தனது பரிவாரங்கள் அனைத்தையும் அனுப்பிவிட்டு தன்னந்தனியாக தியானத்தில் மூழ்கினார். முடிந்தால் சில நேரங்களில் பிட்சைக்குப் போவார். சில சமயம் எதுவுமே கிடைக்காது. பல நாட்கள் பட்டினிதான். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் குருநாதன் ஆசி ஒன்றே போதுமே என்று இருந்து வந்தார்.
ஒருநாள் சத்ரபதி சிவாஜி காட்டு வழியே செல்லும் போது தியானத்தில் இருந்த ரங்கநாத கோஸ்வாமியைக் கண்டு அவரை வணங்கினார். உடனடியாக அவருக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளைச் செய்தார். மீண்டும் பழையபடி பல்லக்கு, கொடி, சாமரம், குதிரை, அறுசுவை உணவு என எல்லாமே ஏற்பாடாகியது.
சில நாட்களுக்குப் பிறகு சமர்த்த ராமதாசர் ரஙகநாத கோஸ்வாமியை சந்தித்தார். ரங்கநாத கோஸ்வாமியை சமர்த்த ராமதாசரை பணிந்து வணங்கினார். ‘நீ இப்படியேஇருக்கலாம்’ என்று ஆசிர்வதித்தார். பின்னர் சீடர்களிடம் அவரது வைராக்கியத்தைப் பாராட்டிப் பேசினார். வசதிகளையும், கஷ்டங்களையும் சம நோக்கில் ஏற்றுக்கொண்டவர் ரங்கநாத கோஸ்வாமி.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்