மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய ரயில்வே தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,
ஓ.எஸ்.ஓ.பி திட்டம்:உள்ளூர் மக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல உதவும் வகையிலும், புறந்தள்ளபட்ட பிரிவைச் சேர்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டும் விதமாகவும், ஒரு ரயில் நிலையம் ஒரு விளைபொருள் (ஓ.எஸ்.ஓ.பி) திட்டத்தை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள 572 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு ஓ.எஸ்.ஓ.பி ரயில் நிலையங்களாக மாற்றப்படுகின்றன.உள்ளூர் உற்பத்தியாளர்களின் விளைபொருட்கள் சந்தைக்கு எடுத்துச் செல்ல இந்தத் திட்டம் உதவும். ஒன்றுக்கும் மேற்பட்ட விளைபொருட்கள் இருக்கும் பட்சத்தில், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சுழற்சி முறையில் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படும். கைவினைப் பொருட்கள், கலைப்பொருட்கள், ஜவுளி மற்றும் கைத்தறி, பாரம்பரிய ஆடைகள், உள்ளூர் வேளாண் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு என்ற பிரிவுகளின் அடிப்படையில் உற்பத்திப் பொருட்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
பிரத்தியேக வழித்தடம்:ரயில்வே அமைச்சகம் 2 அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடங்களை (டி.எப்.சி) அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது. மொத்தம் 2,843 தொலைவு இரண்டு பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் தற்போது 1610 கிலோமீட்டர் தொலைவு வரை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளன.இதனால், சரக்கு ரயில் போக்குவரத்துத் திறன் மேம்படுத்தப்படும்.அதிக அளவிலான சரக்குகளும் கையாளப்படும்.
ஜி.சி.டி முனையங்கள்:விரைவுசக்தி சரக்கு முனையக் கொள்கையின்படி (ஜி.சி.டி) நாடு முழுவதும் 2022 முதல் 2025 வரையிலான 3 நிதியாண்டுகளில் 100 சரக்கு முனையங்களை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 22 முனையங்கள் ஜி.சி.டியின் கீழ், முனையங்களாக மேம்படுத்தப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளன.இந்தத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 125 விண்ணப்பங்களில் 79 விண்ணப்பங்களுக்கு முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களை மேம்பாடு:ரயில் நிலையங்களில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது குறித்து ரயில்வே அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில், முக்கிய நகரங்கள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையொட்டி அமைந்துள்ள ரயில் நிலையங்களில் மறுமேம்பாட்டுப் பணிகளை பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.இதன்படி இந்திய ரயில்வேயின் 43 ரயில் நிலையங்களில் மறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.21 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுக்கான டெண்டர் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மொத்தம் 57 ரயில் நிலையங்களில் மறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது என ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.