பாரதத்தில் பல்லாயிரக்கணக்கான நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு வந்தன. ஆனால் கால ஓட்டத்தில் எண்ணற்ற நெல் ரகங்கள் படிப்படியாக அருகிவிட்டன. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு ரக நெல் ரகங்கள் பிரபலமாக உள்ளன. இவற்றை ஒருங்கே திரட்டவேண்டியது இன்றியமையாதது.
பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் நெல் ரகங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு பொருத்தமான பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. குறுகிய கால ரகம், நடுத்தர கால ரகம், நெடுங்கால ரகம் என காலத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என புலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டிருந்தன.
தமிழ்நாட்டில் வாசனை நெல் ரகங்கள் எண்ணற்றவை இருந்துள்ளன. கந்தசாலி என்றாலே வாசனை நெல் என்றுதான் பொருள். வாசனையின் அடிப்படையிலும் நெல் ரகங்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தன.
குணத்தின் அடிப்படையில் மாப்பிள்ளை சம்பா, சீரகச் சம்பா என்றெல்லாம் பல்வேறு நெல் ரகங்கள் இப்போதும் புழக்கத்தில் உள்ளன.
கேரளாவில் ரத்தசாலி என்ற பாரம்பரிய நெல் ரகம் அழிவின் விளிம்பில் இருந்தது. அருகிக்கொண்டிருந்த ரத்தசாலி நெல் ரகத்தை கேரள தன்னார்வல இளைஞர்கள் பலர் விடாமுயற்சியின் அடிப்படையில் கண்டுகொண்டனர். மலப்புரம் மாவட்டம் திரூரங்காடி என்ற ஊரில் பரீட்சார்த்தமாக ரத்தசாலி நெல் சாகுபடி செய்யப்பட்டது. ரசாயன உரம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ரத்தசாலி, அதிக மகசூலை அளித்தது. ரத்தசாலிநெல்லின் சாகுபடி காலம் 110 நாட்கள் மட்டுமே.
ரத்தச் சிவப்பில் இருப்பதால்தான் இந்த நெல் ரகத்துக்கு ரத்தசாலி என்ற பெயர். இது ரத்தத்தின் சுழற்சிக்கும் சுத்திகரிப்புக்கும் பெரிதும் உதவுகிறது. பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் தணிக்கும் இயல்புடையது ரத்தசாலி அரிசி என்று சித்த வைத்தியர்கள் கூறுகின்றனர்.
ரத்தசாலி அரிசிக் கஞ்சி பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது. நலிந்து மெலிந்து இருப்பவர்களை புஷ்டியாக்க ரத்தசாலி சோறு வழிவகை செய்கிறது. நரம்பு பலவீனத்தை குணப்படுத்துகிறது. ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக கோளாறு போன்றவற்றுக்கும் ரத்தசாலி கைகண்ட மருந்தாக உள்ளது. தாய்ப்பால் சுரப்பு குறைபாடுடைய பெண்கள், பசும்பால், பனைவெல்லம், ஏலக்காய், சுக்கு போன்றவற்றை ரத்தசாலி அரிசியுடன் கஞ்சி வைத்து குடித்தால் தாராளமாக தாய்ப்பால் சுரக்கும்.
தமிழக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியல் உள்ளிட்ட சில பகுதிகளில், இந்த நெல்ரகத்தை சாகுபடி செய்யும் முயற்சியில் தமிழக விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ரத்தசாலியின் மருத்துவ குணங்கள் பிரபலமாகியுள்ளதால் அதற்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த தேவையை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் உற்பத்தி உயரவில்லை. எனவே 1 கிலோ ரத்தசாலி அரிசியின் விலை ரூ. 200க்கு மேல் உள்ளது. உற்பத்தி உயர்ந்தால் அரிசியின் விலை குறையலாம்.