ஓமந்தூரார்” பற்றி பலருக்கு தெரிவதில்லை..!
வரலாற்று முதுகலையில் முதுநிலைப்பட்டம் பெற்ற அனைவருக்குமே வியப்பு. பலர் வரலாற்றை நாம் படிக்கின்றோம், இவர் வரலாற்றை தெரிந்து கொள்ளவில்லையே. தெரிந்து கொள்ளுவோம், இனியாவது,
அரசியல் தலைமைக்கு அவர் ஆகாது போனது ஒரு காரணமென்றால் மீதிக் காரணம் முழுக்கவே அவராகவே இருந்தார். பதவி ஏற்ற அன்றைக்கே விளம்பரப் பிரிவை அழைத்து. நானும் சம்பளம் வாங்கும் அரசு ஊழியன் ஆகி விட்டேன், ஒரு அரசு ஊழியனுக்கு என்ன செய்வீர்களோ அதை மட்டும் தான் எனக்கு செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்..!
அதனாலேயே அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் ஒன்றோ இரண்டோதான் இருக்கிறது. விளம்பரப் பிரிவுக்கு அவர் சம்பந்தபட்ட படங்களை அவரிடம் காட்டி ஒப்புதல் பெற பயம். பாராட்டு விழா, சைரன் வைத்த கார், போலிஸ் அணிவகுப்பு, விளம்பரங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை! மாலை மரியாதை, அன்பளிப்புகள், பொன்னாடைகள் எல்லாவற்றுக்கும் தடா..!
பார்வையாளர்களுடன் போட்டோவுக்கு போஸ் தருவது கிடையாது! அவ்வளவு ஏன், தட்டச்சர் சுருக்கெழுத்தில் எழுத உதவியாளர் எழுத இருக்கும் போது மட்டுமே தேவையிருந்தால் சந்திக்க அனுமதி! தனிமையாக சந்திக்க அனுமதியில்லை..!
அவ்வளவு பெரிய மெட்ராஸ் மாகாண முதல்வருக்கு (தற்போது உள்ள ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளடக்கிய ஆனால் திருவனந்தபுரம், ஹைதராபாத் இல்லாத இடம்) ஒரே போன்! அவர் அனுமதியோடே பேச வேண்டும்..!
மாகாண முதல்வருக்கு ஒரே கார். அதற்கான பெட்ரோல் அலவன்ஸை ஏற்க மறுத்து தன் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வைத்தார். கல்கி, சின்னஅண்ணாமலை உள்ளிட்ட நாற்பது பிரபலங்கள் அவரை சந்தித்து அந்த ஒரு பாராட்டு விழாவிற்காவது ஒப்புக்கொள்ள கெஞ்சினர்..!
“அரசு வீட்டில் குடியிருந்து கொண்டு, அரசு தரும் சம்பளத்தில் ஜீவிதம் செய்யும் அரசு ஊழியன் நான்..! நான் பதவி விலகும் போது வேண்டுமானால் நடத்திக் கொள்ளுங்கள், என்று சொல்லி விட்டார்..! பதவி விலகியதும் கேட்டதற்கும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை..!
இத்தனை எளிமையான மனிதர் அந்தப் பதவிக்கான மரியாதையை விட்டுக் கொடுத்தாரா..? அதுதான் இல்லை..! மாகாண முதல்வர் என்பதாலே மாகாணங்களிலேயே முதன்முறையாக விமானம் வாங்கி ஹனுமன் என்றப் பெயர் சூட்டி டெல்லி பறப்பார்..! அப்பாயின்ட்மென்ட் தந்திருக்கும் நேரத்தில் பார்க்காமல் காலதாமதித்தால் எழுந்து வந்து விடுவார்..!
ஒரு முறை மவுன்ட்பேட்டன் பிரபு பத்து நிமிட காலதாமதத்துக்கு கோபித்துக் கொள்ளலாமா என்றார்..! கோபம் ஓமந்தாரார் ராமசாமிக்கு, இல்லை சென்னை மாகாண முதல்வருக்கு என்றார்..!
அடுத்த முறையிலிருந்து அங்கே அவருக்கு ராஜ உபச்சாரம்..! பதவியின் மாண்பை காப்பாற்றியதற்கு இந்த ஒரு சம்பவம் போதுமென்று நினைக்கிறேன்..!
500 நாட்களில் அவர் பதவி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளில் சில..! இனி உண்டா இத்தனை சாதனை..?
- கோபுர சின்னத்தோடான வாய்மையே வெல்லும் இலட்ச்சினை !
- பாரதியார் பாடல்கள் நாட்டுடமை !
- தமிழ் கலைக்களஞ்சியம் வடிக்க ஏற்பாடு !
- பள்ளிகளில் திருக்குறள் பாடம் !
- எல்லா பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் !
- முதன்முறையாக திருச்சி மாவட்டத்தில் தமிழை ஆட்சி மொழியாக்கியது !
- பூரண மது விலக்கு !
- ஜமீன்தாரி முறை ஒழிப்பு சட்டம் (இந்தியாவுக்கே முன் மாதிரி ! விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்)
- மடாதிபதிகள் திருத்த சட்டம் (பதவியை விட்டுப்போக இந்த இரு சட்டங்களும் காரணமாயிற்று)
- தேவதாசி முறை ஒழிப்பு !
- இந்து சமய அறநிலைத்துறை சட்டம் !
- ஹரிசன நல வாரியம் !
- ஹரிசன ஆலயப்பிரவேசம் !
- ஒரு லட்சம் கிணறுகள் தோண்ட மானியம் !
- ஏரி, குளங்கள் ஆழப்படுத்தி, பயன் கொண்டு வர 1947ல்,19கோடியில் திட்டம் !
- அரசியல் தலையீடற்ற சுதந்திர நிர்வாகம் !
- வருவாய்துறை சீரமைப்பு !
- நிலவரி பாக்கி வைத்துள்ள ஜமீன்தார் ஜப்தி நடவடிக்கை சட்டம் !
- வீடூர் அனைக்கட்டு, பெரியாறு நீர் மின்திட்டம், துங்கபத்ரா திட்டம் என இன்னும் நிறைய
- முதன்முறையாக அரசுக்கு பொருளாதார ஆலோசகர் நியமனம் !
சொல்லிக்கொண்டே போகலாம்.! இடம்தான் போதாது.!
ஐதராபாத் நிஜாம் ஆளுமை கீழ் ரஜாக்கர்கள் என்றால் யார். அன்றைய ஹைதராபாத் சமஸ்தானம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து சேரும் அளவு நிலப்பரப்பு கொண்ட நாடு..! ஒரு கோடியே அறுபது லட்சம் மக்கள் தொகை. இதில் 86சதவீதம் இந்துக்கள்.தனி நாணயம், தனி ராணுவம், தனி அரசாங்கம் என ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி விட்டு தன்னிச்சையாக ஆண்டார் நிஜாம் மன்னர்.
1937யிலேயே, உலகின் புகழ்பெற்ற டைம் அட்டைப் படத்தில் உலகின் பெரிய ஐந்தாவது பணக்காரர் என்று இடம் பெற்றார். 86 மனைவிகள், 216 மக்கட் செல்வங்கள். 1948ல் தோல்வியுற்று, இந்தியாவின் வற்புறுத்தலுக்கிணங்க வானொலியில் பேசிய போது என்ன நடந்தது என்றே தெரியவில்லை, ரஜாக்கர் தலைவன் காசிம் ரஜ்வியின் கைப்பாவை ஆகிப் போனேன்.” என்று சொல்லி, இரண்டு லட்சம் அப்பாவி மக்களின் உயிர் பலியிலிருந்து தப்பித்துக் கொண்டார்.!
மத்திய அரசு அவருக்கு ராஜ்யமுக் என்ற விருதளித்தது.! ரஜாக்கர்களும், தெலுங்கானா கம்யூனிஸ்ட்டுகளும் சென்னை மாகாணத்தின் எல்லையை தாக்கப்போவதா 1948 ஒருநாள் இரவு பத்துமணிக்கு ஓமந்தூராருக்கு தகவல் வந்தது.! ஓமந்தூரார் துளியும் யோசிக்கவில்லை, அடுத்த ஒரே மணி நேரத்தில் எட்டு இராணுவ விமானங்களை எல்லைப்பகுதிக்கு அனுப்பினார்.! ஆடிப்போனார்கள் ரஜாக்கர்கள். நிஜாம் உடனடியாக மத்திய அரசுக்கு கடும் ஆட்சேபனைகளை எழுப்பினார்.! யாருடைய உத்தரவில் விமானங்கள் போனதென அமைச்சரவைக் கூடி கவலையோடு விவாதித்தது.! பட்டேலுக்கு முழு உண்மை தெரியும்.நேருவுக்கும் புரிந்திருந்தது! ஆக்ரோஷமான விவாதத்தில் பட்டேல், ரஜாக்கர் சதிச் செயலை சொல்லி தாம்தான் இராணுவ விமானங்களை அனுப்பியதாக சமயோசிதமாக சொன்னார். நேருவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.!
கொலைகளும், கொள்ளைகளுமாக சமஸ்தானம் அதகளப்பட்டுக் கொண்டிருந்தது.! இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவையும் காந்தியையும் எப்போதும் பிடிக்காத வின்ஸ்டன் சர்ச்சில், ஹைதராபாத் மக்கள் படுகொலையையும், நிஜாமின் செயல்பாடுகளையும் ஆதரித்து பேசினார்.!
வெகுண்டெழுந்த ஓமந்தூரார் அண்டை மாகாண முதல்வர் என்ற முறையில் நீண்ட கண்டனக் கடிதம் எழுதி கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டனுக்கு அனுப்பினார்.! மவுன்ட்பேட்டன் குறிப்பிட்ட காலத்துக்கும் முன்பே ஓய்வு பெற்று, இங்கிலாந்து திரும்பினார்! முதல் இந்திய கவர்னர் ஜென்ட்ரலாக பதவியேற்ற பெருமை தமிழர் ராஜாஜிக்கு கிடைத்தது.!
ராஜாஜி பொறுப்புக்கு வந்தது ஓமந்தூராருக்கு யானை பலம் தந்தது. 1948 பிப்ரவரியிலிருந்தே உடனடியாக ராணுவ நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஓமந்தூரார் நாள்தோறும் மத்திய அரசுக்கு அறிக்கைகள் அனுப்பி வந்தார். கர்நாடக பெல்லாரி மாவட்ட ஹாஸ்பட் ரயில்வே பாலத்தை ரஜாக்கர்கள் தகர்க்கப் போகிறார்கள் என்றத் தகவல் ஓமந்தூராருக்கு கிடைக்கவே தீவிரமாக பாடுபட்டார்.! அந்தப் பாலம் தகர்க்கப்பட்டால் சமஸ்தானம் தனித் தீவாகி விடும்.!
சென்னை அரசாங்க ரிசர்வ் படையும் மைசூர் காலாட்படையும் இரவுபகலாக ஓமந்தூரார் ஆனைக்கிணங்க காவல் காத்தது.! இந்தியாவின் நாணயத்தை சமஸ்தானம் தடை செய்தது, தேசியக்கொடி பறக்க தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லையென்றாலும், மைசூர், பம்பாய் மாகாணங்களையும் சேர்த்துக் கொண்டு சமஸ்தானத்தின் மேல் படையெடுக்க ஓமந்தூரார் முடிவெடுத்தார். அப்போதுதான் எல்லை பாதுகாப்புப் பணியிலிருந்த சென்னை அரசாங்க போலிசார், ரஜாக்கர்களிடம் இருப்பது போன்ற நவீன ஆயுதங்கள் தங்களிடம் இல்லாமல் எப்படி தாக்க முடியும் என்றார்கள்.
நிஜாம் ஆஸ்திரேலியாவிலிருந்து நவீன ஆயுதங்களை தருவித்திருந்தார்.அதை ஓமந்தூராரும் உளவறிந்து மத்திய அரசுக்கு தகவல் சொல்லியிருந்தார்.வழக்கம் போல் மத்தியஅரசு கண்டு கொள்ளவில்லை. ஆயுதம் இல்லாமல் எப்படி போரிடுவது என்று யோசித்த ஓமந்தூரார் செயல்கள் தான் அவரை நிஜ ஹீரோ ஆக்குகிறது.!
தன் யோசனைக்கு மத்திய அரசு தடை தான் விதிக்கும் என்பதைஅறிந்திருந்த அவர், பட்டேலிடம் கூட மூச்சு விடவில்லை. பெரம்பூரில் அப்போது ஒரு சாதாரண ரயில்வே தொழிற்கூடம் இருந்தது.
அங்கு பணியாற்றிய நடராஜன் என்பவர் நாட்டுத் துப்பாக்கி செய்வதில் பயிற்சி பெற்றவர். அவரை அழைத்தார் முதல்வர். அவரிடம் ஆஸ்திரேலிய துப்பாக்கியை தந்தார்.ஒரே நாளில் அதன் நுட்பங்களை நடராஜன் பிரித்து மேய்ந்து கண்டு வந்தார். துணிச்சலாக ஓமந்தூரார், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ஒதுக்குகிறேன், இரவுபகலாக துப்பாக்கிகள் தயாரியுங்கள் என்று உத்தரவு போட்டார்.!
1945ல் டெக்ஸ்டூல் ஆலைக்கதிர் தொழிற்சாலை கோயம்புத்தூரில் செயல்பட ஆரம்பித்திருந்தது. அதன் உரிமையாளர் சுந்தரம் தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர். அவரிடம் பேசி, அந்த ஆலைக்கு அனுமதி தந்து இயந்திர துப்பாக்கிகள் செய்ய வைத்தார்.!
பாரதியாரின் கவிதைகளை நாட்டுடமை ஆக்கியவர் அல்லவா. தேசிய மகாகவியின் வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் பாடல் அவருக்கு மனப்பாடம். அதில் வரும் ஆயுதம் செய்யோம், கல்விச்சாலைகள் செய்வோம் அவர் நினைவிலிருந்தாலும் சூழ்நிலை ஆயுதமும் செய்வோம் ஆக்கியது.!
செய்தியறிந்த நேரு, உடனே ஓமந்தூராரை கூப்பிட்டார். ஆயுதங்கள் செய்ய யார் அனுமதியளித்தது என்று ஆவேசப்பட்டார். இம்முறை ஓமந்தூரார் கோபப்படவில்லை. என் மாகாண மக்களை காப்பாற்ற வேண்டியது என் கடமை. அப்பாவிகள் உயிர்பலியை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இப்போது நான் உங்களிடத்தில் வந்திருப்பது ஆயுதம் தயாரிக்கும் அனுமதிக்காக அல்ல. ஆயுதம் தயாரிக்கும் நிதியுதவிக்காக. விரைந்து தந்தால் நலமாகயிருக்கும். நேருவுக்கு கோபம் மறைந்து போனது. ஒரு கிராமத்து வெள்ளந்தி மனிதராக ஓமந்தூராரின் யதார்த்த பேச்சைக்கேட்டு புன்னகைதான் வந்தது. அப்படி ஒன்றும் உடனடியாக ஹைதராபாத் பிரச்னையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து விடவில்லை.
ஓமந்தூரார் வற்புறுத்தலிணங்க ராஜாக்கர்கள் படையைவிலக்கிக் கொள்ள வேண்டும்n என்று நடுவண் அரசு எச்சரிக்கை தரவே 1948 ஏப்ரல் மாதத்திற்கு மேலாகியிருந்தது. இதற்குள் ஒரு லட்சம் அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தனர். பல்லாயிரம் கோடி சொத்துகள் சூறையாடப்பட்டிருந்தது. இந்திய அரசின் எச்சரிக்கைக்குப்பிறகு இன்னும் நிலைமை மோசமானது.ஐம்பது லட்சத்திற்கும் மேலான இந்துக்கள் சமஸ்தானத்தை விட்டு வெளியேறி இருந்தனர்.
நிலைமை மோசமாவதைப் பார்த்த நேரு, ஹைதராபாத் மேட்டரையும், காஷ்மீர் சங்கதி போல் ஐ.நா.சபைக்கு கொண்டு போய் விடலாம் என்றார். வெகுண்டெழுந்தார் பட்டேல்.
நேருக்கு நேராக நேருவிடம் சண்டைக்குப் போனார்.இந்திய அரசாங்கத்தையே ஐ.நா.சபையிடம் ஒப்படைத்து விடலாமே என்றார். கோபம் கொண்ட பிரதமர்,;நீங்கள் மதவாதி. அப்படித்தான் பேசுவீர்கள் என்றாராம்.
கவர்னர் ஜெனரல் ராஜாஜியும் நேருவின் யோசனைக்கு ஒப்புக் கொள்ளாததோடு, இருவரையும் சமாதானப்படுத்தினார். மாதங்கள் ஓடியது. இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சம் ஆனது! பாகிஸ்தானிலிருந்து விமானங்களில் ஆயுதங்கள் குவிக்கப்படுவதை ஓமந்தூரார் சொல்லிக் கொண்டேயிருந்தார்.
சமஸ்தான நிர்வாகக் குழுவிலிருந்த ஜோஷி அதை உறுதி செய்த பிறகே நேருவுக்கு பயம் வந்து போர் தொடுக்க ஒப்புக்கொண்டார். நேரு ஒப்புக்கொண்டதற்கு வேறு காரணமும் சொல்கிறார்கள்.
காஷ்மீரைப் போலவே, கன்னியாஸ்திரிகளை சூறையாடிய சம்பவமும் ஹைதராபாத்தில் நடந்தது. அதில் 70வயது மூதாட்டியும் ஒருவர். அந்த மூதாட்டியின் தாய்நாட்டு தூதர் நேருவுக்கு எழுதிய கடுமையான கண்டனக் கடிதமே நேருவை படையெடுப்புக்கு சம்மதிக்க வைத்ததாக சொல்கிறார்கள்.
ஓமந்தூரார், ஆயுதங்கள் தயாரித்ததை பட்டேல் மென்மையாக சொல்லி தவிர்த்தார். தயாரித்திருந்த ஆயிரம் துப்பாக்கிகளை இந்திய அரசுக்கு தந்து விட்டு ஓமந்தூரார், புற்று நோயை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து என்று கசப்போடு சொன்னார்.!
1948 செப்டம்பர் மாதம்13ந் தேதி பம்பாய் மாகாண சோலாப்பூரிலிருந்தும், சென்னை மாகாண கர்நூலிலிருந்தும், விஜயவாடாவிலிருந்தும் இந்தியப் படைகள் சமஸ்தானத்தை தாக்கத் துவங்கின. இதுதான் ஏற்கெனவே ஓமந்தூரார் வகுத்துத் தந்திருந்த திட்டம். 17ந் தேதியே சமஸ்தானப் படைகள் சரணடைந்து விட்டன.
32 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டாலும், 490 நிஜாம் வீரர்களும், 1373 ரஜாக்கர்களும் கொல்லப்பட்டனர். “ஆபரேசன் போலோ “ ஐந்தே நாட்களில் சக்சஸ். தற்காலிக கவர்னராக ஜெனரல் செளத்திரி பொறுப்பேற்றுக்கொண்டார். வலிமையான பாரதம் மட்டும் உருவாகவில்லை, நிஜாமின் திரண்ட சொத்துகளும் இந்தியாவுக்கு சேர்ந்தது. அண்மையில் கூட லண்டன் வங்கியிலிருக்கும் நிஜாமின் 350 கோடி ரூபாய் சொத்து இந்திய அரசுக்கே சொந்தம் என இங்கிலாந்து கோர்ட் தீர்ப்பு சொன்னது.
டெல்லி ரிசர்வ் வங்கி காப்பகத்திலிருக்கும் நிஜாமின் நகைகள் மதிப்பு ஐம்பதாயிரம் கோடி. கோல்கொண்டா கோட்டை, கிருஷ்ணா கோதவரி நதிகள் என எல்லாமே இந்தியாவுக்கு சொந்தம்.
சொத்துக்களும் நிலங்களும் கிடக்கட்டும். இந்திய துணைக்கண்டத்தின் ஒற்றுமையும், சமாதானமும், வளர்ச்சியும் தேசம் ஒன்றுபட்டதாலே கிடைத்தது. ஓமந்தூர் ராமசாமி மட்டும் இல்லையென்றால் இந்திய வரைப்படம் மாறியிருக்கும்.
எல்லாப்புகழும் அந்த ஒற்றை நாடி மனிதரையே சேரும்..! கதர் தொள தொளா ஜிப்பா, நாலு முழ வேட்டி, கதர் அங்கவஸ்திரம், இரண்டு இட்லி, கப்அளவு சாதம், கொஞ்சூண்டு துவையல், மோர் என்று வாழ்ந்த மனிதனின் புகழை ஆயுள் உள்ளவரை சொல்லலாம்..!
பட்டேல் தான் இந்த வெற்றிக்குப் பிறகு, புற்று நோயை வேரடி மண்ணோடு கிள்ளி எறிந்தவர் “ ஓமந்தூரார் ” என்று புகழ்ந்தார்..! தனது தேச வரலாற்றை அறியாதவனை குடிமகனாக கொண்ட நாடு தலைநிமிர்ந்து நிற்ப்பதில்லை.
ஜெய் ஹிந்த்