ஆண்டு: 1974…
இந்திரா காந்திக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் இந்திய அரசியலில் சூறாவளி வீசிக் கொண்டிருந்த நேரம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இந்திரா காந்தி தன் பதவியைக் காத்துக்கொள்ள இரண்டாம் அவசரக்காலத்தைப் பிரகடனம் செய்வதற்கு முந்தைய ஆண்டு அது.
அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பைச் சற்றும் மதிக்காத இந்திரா காந்தி தன் பிரதமர் பதவியை விடா படியாகப் பற்றிக் கொண்டிருந்த போது, ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையில் இந்திராவுக்கு எதிராக இந்தியா திரண்டு கொண்டிருந்தது. தேசம் எங்கிலும் இந்திராவுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. அதில் ஒரு பகுதியாக நவம்பர் 4, 1974 அன்று பீகார் தலைநகரான பாட்னாவில் ஜெய்பிரகாஷ் அவர்கள் தலைமையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் ஒன்று நடந்தது.
திடீரென போராட்ட கூட்டத்தில் நுழைந்த போலீசார் மக்களைக் கண்மூடித் தனமாகத் தாக்கி ஜெய்பிரகாஷ் அவர்களை நோக்கி முன்னேறினர். ஜெய்பிரகாஷ் இல்லாமல் போய்விட்டால் போராட்டங்கள் ஓய்ந்து விடும் என்பது கூட அவர்களின் எண்ணமாக இருந்திருக்கலாம். தொண்டர்களின் பாதுகாப்பையும் மீறி போலீசாரின் லத்தி ஜெய்பிரகாஷ்யின் மீது பாய்ந்தது. போலீசாரின் தாக்குதலில் நிலைகுலைந்து, நினைவிழந்து கீழே சரிந்தார் அவர்.
அப்பொழுது அந்த கூட்டத்திலிருந்த ஒருவர், கீழே விழுந்த ஜெய்பிரகாஷ்யின் மீது படர்ந்து போலீசாரின் லத்திகள் ஜெய்பிரகாஷ் மீது தாக்காதவாறு உறுதியான அறனாக மாறினார். ஜெய்பிரகாஷ் அவர்கள் வாங்க வேண்டிய மொத்த அடியையும் அந்த நபர் வாங்கிக் கொண்டார். போலீசாரின் லத்திகள் அவர் கையை உடைத்த போது கூட அவர் தளரவில்லை. மாறாக இரும்புத் தூணாக நின்று ஜெய்பிரகாஷ்யை காப்பாற்றினார்.
யார் அந்த நபர்?
ஜெய்பிரகாஷ்யின் இரத்த உறவா? ஜனநாயக காப்பாளர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள முயலும் கம்யூனிசவாதியா? ஒரு பக்கம் சிலுவையையும், குல்லாவையும் அரவணைத்துக் கொண்டு, மறுபக்கம் குங்குமத்தை அழித்துவிட்டுச் செல்லும் பகுத்தறிவுவாதியா??? கண்டிப்பாக இல்லை…
தன் உயிரைத் துச்சமென மதித்து ஜெய்பிரகாஷ்யின் உயிரைக் காப்பாற்றியவர் – “மதவாதம்” என ஊடகங்களால் முத்திரை குத்தப்படும் RSS அமைப்பில் தன் இளமை வயது முதலே ஊறித் திளைத்தவர். பாரதிய ஜன சங்கத்தின் முக்கிய தூணாக விளங்கியவர். எமர்ஜன்சியை எதிர்த்து சிறை வாசம் சென்றவர். அவர் தான் நாணாஜி தேஷ்முக்.
நாணாஜி ஏன் அவ்வளவு வரிந்துகட்டிக் கொண்டு ஜெய்பிரகாஷ்யை காக்க வேண்டும்? அவர் என்ன ஜெய்பிரகாஷ்யின் சொந்தக்காரா? ஜெய்பிரகாஷ் – நாணாஜி அவர்கள் இருவருக்கும் இருந்த ஒரே உறவு “தேச பக்தி”. ஜெய்பிரகாஷ் நாராயணன் தேசம் காக்கப் போராடினார். நானாஜி தேஷ்முக் தேசத்துக்காக தன் உயிரையும் தரத் தயாராக இருந்தார். ஏனென்றால் அதைத் தான் RSS அவருக்குப் போதித்தது.
இவ்விரு தலைவர்களுக்குள்ள மற்றொரு ஆச்சரியமான ஒற்றுமை – இருவரின் பிறந்த தினமும் ஒரே தேதியில் வருகிறது!
ஜெய்பிரகாஷ் நாராயண் பிறந்த தினம்: 11 October 1902.
நாணாஜி பிறந்த தினம்: 11 October 1916.
இத்தினத்தில் இத்தலைவர்களில் தியாகத்தைப் போற்றி பாரதத் தாயின் பாதம் பணிவோம்.
சுஜின் சௌந்தர் ராஜன்.