சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்த்தினர் ‘ஜெ’யின் ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டு முறைகேடாக கோடிக்கணக்கில் கொள்ளையடித்து சொத்துக்களைக் குவித்தார்கள். இது ஒன்றும் பரம ரகசியம் இல்லை. தமிழ்நாட்டில் சாதாரண குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூட தெரிந்த விஷயமே. முறைகேடாக சொத்து குவித்தார் என்று வழக்கு நிரூபணம் ஆனதால்தானே ‘ஜெ’வுக்கும் சசிகலாவுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது?
இத்தகைய சூழ்நிலையில் சசிகலா குடும்பத்தினர் வீடுகளில், அலுவலகங்களில் வருமானவரிச் சோதனை நடைபெற்றது. இது வெறும் வருமான வரி ஏய்ப்புக்கான நடவடிக்கை இல்லை. கருப்புப் பண பதுக்கலை வெளியே கொண்டு வருவதற்கான அதிரடி நடவடிக்கை.
பொதுமக்கள் இது எப்போதோ நடந்திருக்க வேண்டும்… இப்போதாவது நடந்ததே என்று நினைக்கிறார்கள். அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்கள் கூட, இது மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என்று கருத்து தெரிவித்திருப்பதுதான் அபத்தம். ஜெ-சசி சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் பிப்ரவரியில் அளித்த தீர்ப்பு சித்தரித்த திட்டமிட்ட கொள்ளை மக்களைத் திகைக்க வைத்தது. ஆனால் வருமான வரி புலனாய்வு அமைப்பு நடவடிக்கையை அற்புதமாக திட்டமிட்டு செயல்படுத்தியது. இதில் எங்கே வந்தது மத்திய அரசு?
தொலைக்காட்சி ஊடகங்கள் இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்ற அளவிலேயே விவாதங்களை அரங்கேற்றின.
ஸ்டாலின் உள்பட பலர் இதற்கு முன்பு நடந்த சோதனைகள் மீது எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர். சோதனை முடிந்த ஓரிரு நாட்களிலேயே நடவடிக்கை வராது. அதற்கு சில மாதங்கள் ஆகலாம்.
ஒன்று மட்டும் நிச்சயம். குற்றவாளிகளை தப்பிக்கவிட, நடப்பது மன்மோகன்சிங் அரசல்ல; இது மோடி அரசு. குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது.