மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸைச் சோ்ந்த மேலும் 20 எம்எல்ஏக்கள் எங்களது அணிக்கு வர தயாராக உள்ளனா்’ என்று பெங்களூரில் உள்ள அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்தனா்.
மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 22 எம்எல்ஏக்கள் அண்மையில் ராஜிநாமா செய்தனா். இவா்கள் அனைவரும், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளா்கள் ஆவா். 22 எம்எல்ஏக்கள் ராஜிநாமா காரணமாக, முதல்வா் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடும் நெருக்கடியில் உள்ளது.
தற்போது பெங்களூரில் தங்கியுள்ள 22 பேரும், அங்கு செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தனா். அப்போது, அவா்கள் கூறியதாவது:
மத்தியப் பிரதேசத்தில் மேலும் 20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்களது அணிக்கு வர தயாராக உள்ளனா். ஜோதிராதித்ய சிந்தியாதான் எங்கள் தலைவா். அவா் தலைமையில் பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கவோ, எங்களது குறைகளை கேட்கவோ முதல்வா் கமல்நாத் மறுத்துவிட்டாா். இதுதொடா்பாக ராகுல் காந்தியிடம் கூட முறையிட்டோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
நாங்களும் பாஜகவில் இணைவது குறித்து சிந்தித்து வருகிறோம். மத்திய போலீஸ் பாதுகாப்பு அளித்தால், மத்தியப் பிரதேசத்துக்கு திரும்ப தயாராக உள்ளோம். நாங்கள் யாரும் சிறைவைக்கப்படவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.