அசாம் மாநிலம், சில்சர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் கோதானி. 28 வயதான இவர் ஒரு மாற்றுத்திறனாளி. ஓவியத்தில் திறமை வாய்ந்தவர். இவர் ஒருமுறை அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை சந்தித்தார். அப்போது அவருக்கு ஓவியம் ஒன்றை பரிசளித்தார். பிரதமர் மோடியை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்தார். முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார். அதனடிப்படையில் சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து அபிஜித் தன்னுடைய தாயார் மற்றும் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுடன் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது பிரதமருக்காக தான் வரைந்த ஓவியத்தை பரிசாக வழங்கினார். அந்த ஓவியத்தில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அமைந்திருந்தது. மோடி, அவரது தாயாரிடம் ஆசி வாங்குவது, ஐ.நா சபையில் பேசுவது, சிறுவயது முதல் பிரதமராக பதவியேற்றது வரையிலான படங்கள் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. பிரதமரை சந்தித்து மிகுந்த சந்தோஷத்தை அளித்திருப்பதாக அபிஜித் கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “முன்னதாக இன்று, அசாமைச் சேர்ந்த அபிஜித் கோதானி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். என்றும் நினைவுகூறத்தக்க அவரது இந்த கலந்துரையாடல் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்…“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.