ஹிந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய, மேலும் ஒரு பயங்கரவாதியை, பெங்களூரில், தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அம்பத்துார் அடுத்த மண்ணுார்பேட்டையை சேர்ந்தவர், சுரேஷ்குமார். திருவள்ளூர் மாவட்ட, ஹிந்து முன்னணி தலைவர். இவரை, 2014ல், மர்ம நபர்கள் சராமாரியாக வெட்டிக் கொன்றனர். விசாரணையில், சென்னை, கடலுார் மற்றும் பெங்களூரை சேர்ந்த பயங்கரவாதிகளால், இவர் கொல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில், ஏற்கனவே, 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கு மூளையாக செயல்பட்ட, பயங்கரவாதிகள் சையது அலி நவாஸ், 25; அப்துல் சமீம், 25; காஜா மொய்தீன், 47 ஆகியோரை, சமீபத்தில், டில்லி போலீசார் கைது செய்தனர். இவர்கள், ‘ஜிகாத்’ என்ற, இஸ்லாம் எதிரிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில், ஹிந்து தலைவர்களின் உயிருக்கு குறி வைத்துள்ளது, தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, பெங்களூரில், இளநீர் வியாபாரிகள், சலவை தொழிலாளிகள் போல் தங்கியிருந்த, ‘ஜிகாத்’ அமைப்பை சேர்ந்த முகமது ஹனீப்கான், 23, இம்ரான்கான், 32, முகமது ஜெயித், 24 ஆகியோரை, கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், பெங்களூரில் ஓட்டுனராக பணியாற்றிய, காஜா மொய்தீன் கூட்டாளியான, இஜாஸ் பாஷாவை, தமிழக கியூ பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம், களியக்காவிளை சிறப்பு எஸ்.ஐ., வில்சன் கொலை குறித்து, விசாரிக்கப்பட்டு வருகிறது.