கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழகத்துக்கு 8 தங்கம்

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சரண் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.

குவாஹாட்டியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 21 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் எஸ்.சரண் 7.41 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். ஹரியாணாவைச் சேர்ந்த பூபேந்தர் சிங் (7.30)வெள்ளிப்ப தக்கமும், கேரளாவைச்சேர்ந்த ஆர்.சஜன் (7.29) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

முதல் 5 வாய்ப்புகளில் சரண் வெண்கலப் பதக்கத்துக்கான இடத்திலேயே இருந்தார். பூபேந்தர் சிங் (7.30), சஜன் (7.29) ஆகியோர் முதல் இரு இடங்களில் இருந்தனர். ஆனால் தனது கடைசி வாய்ப்பில் சரண் 7.41 மீட்டர் தூரம் தாண்டி அசத்தினார்.

10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திக் குமார் (30:43.97) தங்கப் பதக்கமும், தமிழகத்தின் எம்.சதீஷ் குமார் (31:21.30), குஜராத்தின் விஷால் வஷ்ரம்பாய் மக்வானா (31:42. 08) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

21 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான போல்வாட்டில் தமிழகத்தின் பவித்ரா 3.50 மீட்டர்உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். மத்திய பிரதேசத்தின் பபிதா படேல் வெள்ளிப் பதக்கமும், கேரளாவின் மாளவிகா ரமேஷ் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

21 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டேபிள் டென்னிஸில் தமிழகத்தின் செலினா தீப்தி, தீபிகா நீலகண்டன் ஜோடி இறுதி சுற்றில் 11-8, 5-11, 11-7, 11-3 என்ற செட் கணக்கில் மேற்கு வங்கத்தின் கவுசனி நாத், சுர்பி பட்வாரி ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

மற்றொரு தமிழக ஜோடியான கவுசிங் வெங்கடேஷன், யாஷினி ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் டேபிள் டென்னிஸில் தமிழகத்தின் விஷ்வா தீனதயாளன், சுரேஷ் பிரேயஷ் ஜோடி வெண்கலப் பதக்கம் பெற்றது.