மேற்கு வங்கத்தில் மம்தாவின் விழ்ச்சியும், பாஜகவின் எழுச்சியும்

வங்காளத்தின் அரசியல் வரலாற்றை அறிந்தவர்கள் கூர்ந்துநோக்குபவர்கள் பத்தாண்டுகளுக்கு பிறகு சரித்திரம் திரும்புகிறது என்று உறுதியாகக் கூறுகின்றனர்.ஆமாம், 2009ல் மமதா முப்பத்திரண்டு ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த மார்க்சிஸ்ட்டுகளை உலுக்கிப்பார்த்தார். அந்த நாடாளுமன்ற தேர்தலில் 19 தொகுதிகளில் வென்று கம்யூனிஸ்டுகளுக்கும் முடிவு உண்டு என்று உணர்த்தி மறுமலர்ச்சியை (பரிவர்த்தனை) ஏற்படுத்தினார்.அது ஒரு சாதாரண வெற்றியல்ல. 1977 முதல் ஜோதிபாசுவும் பின்னர் வந்த புத்த தேவ்பட்டாச்சார்யாவும் கிராமங்களுக்கு ஜனநாயகத்தை இட்டுச்செல்கிறோம் என்ற பெயரில் உள்ளூர் காம்ரேடுகளும் வைத்ததே சட்டம் என்ற நிலையை உருவாக்கினர். மாவட்ட ஆட்சியரும் காவல்துறை அதிகாரியும் அந்த ஊரின் கம்ம்யூனிஸ்டு தலைவர் இடும் பணியை ஏற்று செயல்படுத்தவேண்டும். கம்ம்யூனிஸ்டுகள் நகர்ப்புறத்தில் ஜோதிபாபுவின் முகத்தைக்காட்டி இவர்கள் மிகவும் நாகரீகமானவர்கள் (பதர்லோக்) என்ற எண்ணத்தை தோற்றுவித்தாலும் ஊர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் அடாவடி அரசியல் செய்தவர்கள்அவர்கள். புத்ததேவ் ஆட்சியில் சிங்ரூர் மற்றும் நந்திகிராமில் செய்த குளறுபடிகள், விவசாயிகள் எதிர்ப்பு , அதனை ஒடுக்க நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடுகள், அவற்றினால் கம்ம்யூனிஸ்டுகள் மீது ஏற்பட்ட வெறுப்பு சூழ்நிலையை மமதா மிகவும் சாதுர்யமாக அறுவடை செய்தார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் நம்பிக்கை ஏற்படுத்திய திரிணமுல் கட்சி 2011 சட்டசபை தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்று மாநில அரசைக் கைப்பற்றினர்.

அப்படி ஆட்சிக்கு வருவதற்கு மமதாவிற்கு மாவோயிஸ்டுகளின் தயவு அவருக்கு தேவைப்பட்டது. அதேபோல் முஸ்லீம்களைத் தாஜா செய்வது அவருக்கு தாய்வீடு காங்கிரஸ் கட்சி கற்றுக்கொடுத்த பாடம். இந்த எட்டு ஆண்டுகளில் மமதா ஆட்சியில் அவர் இடதுகளையே வெட்கப்படவைக்கும் அளவுக்கு போலீஸ் அராஜகத்தை ஏவி எதிர்க்கட்சிகளை அடக்க முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்கள் அடக்குமுறையின் உச்சக்கட்டம். எதிர்க்கட்சிகள் வேட்புமனுக்களைக்கூட தாக்கல் செய்யமுடியாத சூழ்நிலை. இத்தனையையும் மீறி பாஜக 17 சதவீதவாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றது மறுக்க முடியாத சாதனை. இவற்றைத் தவிர ஷாரதா -நாரதா ஊழல்களும், ஊழல்வாதிகளைக் காப்பாற்ற மமதா ஆட்சியும், வாய்க்கு வந்தபடி அரசியல் எதிர்ப்பாளர்களை வாய்க்கு வந்தபடி ஏசுவது என்று எல்லாவற்றிலும் மார்க்ஸிஸ்டுக்கள் வழியலியே செல்கிறது. காங்கிரசும், மார்க்சிஸ்டு கட்சிகளும் வங்காளத்தில் நம்பிக்கை அளிக்க முடியாத நிலையில் 2009ஐப் போன்று 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மம்தாவின் திரிணமுல் கட்சிக்கு பலத்தகுரலில் எச்சரிக்கை மணி அடிக்கப்போகிறது. மாநிலத்தின் 50 சதவீத தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது நிகழ்ந்தேறினால் அடுத்த மாநில ஆட்சி உறுதியாக பாஜகவின் வசம்தான் செல்லும் என்று சொல்லலாம்.