உள்ளாட்சி பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ரா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி விவகாரங்கள் துறைஅமைச்சரான பிர்ஹாத் ஹக்கீம்திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளவர். தெற்கு கொல்கத்தாவின் செட்லா பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான இல்லத் துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு மத்திய பாதுகாப்பு படையினருடன் வந்தனர். 2 சிபிஐஅதிகாரிகள் அமைச்சரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அமைச்சரின் ஆதரவாளர்கள் அதிகாரிகளை கண்டித்து வீட்டின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல, முன்னாள் அமைச்சரும், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கமர்ஹாட்டி தொகுதியின் எம்எல்ஏ-வுமான மதன் மித்ராவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கமர்ஹாட்டி நகராட்சி பணிநியமன ஊழலில் மித்ராவுக்குமுக்கிய பங்கு இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களைத் தவிர, காஞ்சராபாரா நகராட்சியின் முன்னாள் தலைவர் சுதாமா ராய், ஹலிசஹர் நகராட்சியின் முன்னாள் தலைவர் அங்ஷுமன் ராய் மற்றும் கிருஷ்ணா நகர் நகராட்சியின் முன்னாள் தலைவர் ஆசிம் கோஷ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
நிதி பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அபிஷேக் பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை மக்களிடமிருந்து திசை திருப்பவே சிபிஐ சோதனை நடத்தப்படுகிறது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி சவுகதா ராய் குற்றம் சாட்டினார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரிடம் மறைக்க எதுவும் இல்லை என்றால் ஏன் அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை கண்டுஅஞ்ச வேண்டும். ஊழல் செய்தவர்களிடம் சோதனை நடத்தும்போது அரசியல் உள்நோக்கம் என்று குற்றம்சாட்டுவதை அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளில் ஆட்களை சேர்ப்பதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளன.இந்த ஊழல்களை விசாரிப்பதில்மாநிலத்தில் உள்ள சிஐடி போலீஸார் தோல்வியடைந்ததால்தான் மத்திய புலனாய்வு அமைப்புகள் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.